கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க நேரிட்டது

Illangakoon_IGP_CI

 

கடந்த 2015 ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சித்திட்டம் பற்றி நேற்றைய தினம் ஓய்வு பெற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேரடியாக பதிலளிக்கவில்லை.

ஓய்வு பெற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்றைய தினம் இறுதியாக ஓர் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்தில் சூழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன் போது, அந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காது மெல்லிய புன்னகையுடன் ஒரு நிமிடம் வரையில் மௌனம் காத்த காவல்துறை மா அதிபர், இந்த சம்பவம் பற்றி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட ஆலோசனை கோரி ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தம்மிடமும் விசாரணை நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, காவல்துறை மா அதிபர் முப்படைத் தளபதிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் நாட்டின் ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் முயற்சித்தனர் என தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்றுக் கொள்ளும் திகதியிலிருந்து ஒரு நாளேனும் தமது பதவியை நீடித்துக்கொள்ள விரும்பவில்லை என என்.கே. இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல்வேறு அரசியல் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.