முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சகோதரருமான பசில் ராஜபக்ஸவிற்கு கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் மிதமிஞ்சிய அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடாத்த உள்ளது.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோதபாயவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் ஒருவருக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சு முப்படை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 179 உத்தியோகத்தர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளதார அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றிய பசில் ராஜபக்ஸவிற்கு, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 179 பேர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இதில் மூன்று பெண் கடற்படை உத்தியோகத்தர்கள் பசில் ராஜபக்ஸவின் மனைவி புஸ்பா ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் ஒருவருக்கு இவ்வாறு மித மிஞ்சிய அளவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தியமை ஓர் பாரதூரமான நிலைமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பசிலின் வீட்டை சுத்தம் செய்யவும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.