தலைவரின் மனச்சாட்சியிடம் ஒரு வேண்டுகோள்

slmc baheer , rauff hakeem hasan ali

 

 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ந்திகதி பெருந்தலைவர் மரணித்து அடுத்த நாள் தாறுஸ்ஸலாமில் உங்கள் தலைமைத்துவத்துக்கு ஆதரவு தெரிவித்து உங்களுக்காக ஒன்றுதிரண்ட போராளிகள்மீது கொழும்புக் காடையர்களை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியவர்தான் நமது இன்றைய பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட்.

2005ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் அத்தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிடமுடியாமல் கட்சிக்கெதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெற்று கட்சியையும்,தலைமையையும் நீதிமன்றத்தில் நிறுத்தி அவமானப்படுத்தினார் ஹாபிஸ் நஸீர் அஹமட். அது மட்டுமல்லாது தனது பணபலத்தையும் அன்றைய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தையும் பயன்படுத்தி கட்சியை உங்களிடமிருந்து கபளீகரம் செய்ய முயன்று அதில் தோல்வியடைந்தார்.

அப்படிப்பட்ட ஹாபிஸ் நஸீரையே மன்னித்து கட்சியின் பிரதித்தலைவராக்கி கிழக்கின் முதல்வராக்கி அழகுபார்த்த உங்கள் மனச்சாட்சி சகோதரர் ஹஸன் அலி அவர்களுடைய விடயத்தில் நிதானம் தவறாமலும், நன்றி மறக்காமலும் நேர்மையாக நடக்கவேண்டுமென்பதே கட்சியின் உண்மையான போராளிகளின் எதிர்பார்ப்பாகும்.

தேசியப்பட்டியல் பங்கீட்டுக்கு அப்பால் செயலாளருடைய அதிகாரக்குறைப்பு விடயத்தில் தலைவர் சில விட்டுக்கொடுப்புக்களை செய்வது கட்சியின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடாகும். ஏனென்றால் சகோதரர் ஹஸன் அலி அவர்கள் செயலாளர் நாயகம் என்ற பதவியில் இருக்கின்ற காலம் வரை தலைவர் ஹக்கீம் அவர்களின் தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் நேராது என்பதே போராளிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கடந்த 15 வருடங்களாக உங்கள் தலைமைத்துவம் பல சவால்களையும் சமாளித்து இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறதென்றால் அதற்குப் பிரதான காரணம் கட்சியின் செயலாளர் நாயகத்தின் அசைக்க முடியாத தலைமைத்துவ விசுவாசம்தான் என்பதை இன்னும் உங்கள் மனச்சாட்சி உணரவில்லையென்றால் அதனை நிச்சயமாக எதிர்காலம் உங்களுக்கு உணர்த்தும். அப்போது சில வேளைகளில் எல்லாமே நடந்து முடிந்திருக்கலாம். இறைவன் பாதுகாக்க வேண்டும்.

மனச்சாட்சியுள்ள போராளிகள்.