இலங்கை தமிழர்களுக்கு, ஆறு மாதத்தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்

swaminathan dm_Fotor

 

“இலங்கையில், மீள் குடியமர்த்தல் பணிகள் நன்றாக நடந்து வருகின்றன. 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி அளித்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு, ஆறு மாதத்தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இலங்கையில், 32 முகாம்களில் உள்ள மக்களையும் விடுவித்து, அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.” என, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 
தமிழகம் சென்றுள்ள டீ.எம்.சுவாமிநாதன் நேற்று (10.04.16), சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின் போது,

 
இந்தியாவில், 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதில் சிலர் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இலங்கையில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின், இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து ஜூன் மாதத்திற்குப் பின், இராணுவத்திற்கு தேவையான இடங்கள் போக, மற்ற இடங்கள் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் முஸ்லிம் உட்பட, எந்த சிறுபான்மையினர் மீதும் தற்போது தாக்குதல்கள் இடம்பெறுவதில்லை, எனவும் தெரிவித்தார்.

 
இதேவேளை ‘தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திருப்பி வழங்கப்படும்,’  தமிழக மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் வருவதால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது, சில மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் திரும்பி அளிக்கப்படும். இதுதொடர்பாக, இந்தியா – இலங்கை அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன எனவும் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.