யாழில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணி விடுவிப்பு

 Sri-Lankan-Navy

 

 யாழ். கீரிமலை, சேந்தாங்குளத்தில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படவிருந்த தேவாலயத்துக்குச் சொந்தமான காணி, பொதுமக்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த 16 பரப்புக் காணியை நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டதாகப் பங்குத் தந்தை தெரிவித்தார்.

கீரிமலை சேந்தாங்குளத்தில் உள்ள தேவாலயத்துக்குச் சொந்தமான காணி 1990ம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. 

2011ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மக்கள் மீள்குடியமர்வதற்காக அனுமதிக்கப்பட்ட போது, தேவாலயத்துக்குச் சொந்தமான காணியில் கடற்படையினரின் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்தக் காவலரணை விரிவாக்கும் நோக்குடன் மேலதிக காணிகளையும் உள்வாங்கி,கடற்படைக்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அறிவித்தல், கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

இதற்காகத் தேவாலயக் காணியை அளவீடு செய்வதற்குநிலஅளவையாளர்கள் சென்ற போதும், பொதுமக்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டிருந்தது. 

பின்னர் இந்த ஆண்டு மீளவும் அந்தக் காணியைச் சுவீகரிக்கும் நோக்குடன் அளவீட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போதும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

இவ்வாறானதொரு நிலையிலேயே, தேவாலயக் காணியை மீளவும் கையளிப்பதற்குக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

காணி மீளவும் கையளிப்புக்கான உரிய ஆவணங்கள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்படையினர், காணியைத் தேவாலயப் பங்குத் தந்தையிடம் நேற்று முன்தினம் கையளித்துள்ளனர். 

காணியிலிருந்த காவலரணும் நேற்று முன்தினம் அகற்றப்பட்டுள்ளது.