சவூதி அரேபியாவுக்கு உத்தியோர்க விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் சிறிலங்கா ஹிரா பௌண்டேஷனின் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அஷ்ஷேய்க் ஈணூ. பைசல் ஹஸ்ஸாவி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுடைய நிலை, சிறிலங்கா ஹிரா பௌண்டேஷனின் செயற்திட்டங்கள் மற்றும் இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
இதன்போது, இலங்கைக்கு உத்தியோர்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இமாம் அவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்தார். இவ் அழைப்பை ஏற்றுக்கொண்ட இமாம் ஈணூ.அஷ்ஷேய்க் பைசல் ஹஸ்ஸாவி அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டதோடு இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மக்கா நம்பிக்கை நிதியத்தினுடைய பொது முகாமையாளர் அஷ்ஷேய்க் முஹம்மட் மிர்சாலி, டக்தாஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் ரஹீம் இந்துஜானி, மக்காஹ் அந்துஜானி குடும்ப நிதியத்தினுடைய நிருவாக பொறுப்பாளர் அஷ்ஷேய்க் ஈணூ நஜிமுதீன் அல் அந்துஜானி, மக்கா ஆறிப் அத்துர்கிஸ்தானி நிதியத்தினுடைய தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் அசீஸ் ஆரிப் அவர்களும் அதன் செயலாளர் அஷ்ஷேய்க் அப்துல் ஹபீல் மர்கலாணி, மக்காஹ் நிதியத்தினுடைய பொறுப்பாளர் அஷ்ஷேய்க் அப்துல் ஹபீல் துர்கிச்தானி மற்றும் சர்வதேச அரபு கற்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் துக்தூர் பைசல் அவர்களும் கலந்துகொண்டனர்.