நாடு திரும்பிய பிரதமரின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு!

5708-prime-minister-ranil-wickramasinghe-news125356833

சீனவுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ததோடு பல கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பு இன்று காலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதமர் தனது சீன விஜயத்தின் போது இலங்கை தொடர்பில் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு கூறினார்.

2017ஆம் ஆண்டு இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் முக்கியமான வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜூலை மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் பயணமாகவுள்ளார். G7 மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடுதிரும்பிய பின்னர் அடுத்த மூன்று வருடங்களுக்கான பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், போட்சிட்டியை யாருக்கும் நிரந்தரமாக வழங்கவில்லை. போட்சிட்டிக்கான நிலங்கள் 99 வருடகால குத்தகையின் அடிப்படையிலேயே வழங்கப்படும். இந்த போட்சிட்டியில் யாவரும் நிலங்களை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் குத்தகையின் அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவித்தார்.

அதுமட்டுமின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் மற்றும் மத்தள விமான நிலையத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் சீனா உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது எனவும் பிரதமர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை ஒரு பொருளாதார மத்திய நிலையமாக உருவாக்க உள்ளதாகவும், அதேநேரம் இந்த திட்டத்திற்காக சீனாவிடமிருந்து ஒருசதம் கூட கடனாக பெறப்போவதில்லை, ஆனால் நன்கொடைகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த வருடத்திற்குள் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் முக்கியமான வர்த்தக பொருளாதார உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும் எனவும் இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.