ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைய பதவி நியமனங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் சில பதவிகளை ரத்து செய்து சில பதவிகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் இந்த நடவடிக்கைகள் குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான தயா கமகே, தாம் வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியை இழந்தமை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் எந்தவொரு முக்கிய பதவியும் தமக்கு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாம் ஏதும் பிழை செய்திருக்கின்றேனா அல்லது கட்சிக்கு உரிய பங்களிப்பினை வழங்கவில்லையா என ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், இளைஞர்களுக்கு பதவிகளை வழங்கி மூன்றாம் நிலைத் தலைமையை உருவாக்கும் நோக்கில் கட்சியில் அண்மையில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.