பனாமாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கசிந்த மில்லியன் கணக்கான ஆவணங்கள், உலக அளவில் இன்னும் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன.
கடந்த ஒரு வாரகாலமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தந்தை இயன் கேமரூனின் வெளிநாட்டு நிறுவனம் பிரிட்டனில் வரி கட்டாமல் தவிர்த்ததா? அதன் லாபம் டேவிட் கேமரூனுக்கு கிடைத்ததா என்கிற புகார்கள் நீடித்து வந்தன.
1980 களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளிநாட்டு நிதியத்தை டேவிட் கேமரூனின் தந்தை உருவாக்கினார் என்றும், அந்நிறுவனம் பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்றும் பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன.
வரி தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என்று சர்வதேச மாநாடுகளில் வலியுறுத்திய பிரிட்டன் பிரதமர், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பலனடைந்தாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
இறுதியில் தன் தந்தை நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு பங்குகளை வாங்கியதாக ஒப்புக்கொண்ட டேவிட் கேமரூன், அதற்கான அனைத்து வரிகளையும் செலுத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
வரி கட்டாமலிருக்கும் நோக்கத்துக்காக தம் தந்தை இந்நிறுவனத்தை உருவாக்கவில்லை என்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தை டொலர் மதிப்பில் செய்ய அனுமதிக்கப்பட்ட புதிய நடைமுறைக் கேற்பவே இந்நிறுவனத்தை அவர் துவக்கியதாகவும் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனத்தில் அவர் பங்கு வைத்திருந்ததாகக் குறிப்பிடும் காலகட்டத்தில் பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவராக கேமரூன் இருந்தார்.
பிரிட்டனில் 2010-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கேமரூன் முதல் முறையாக பிரதமர் பதவியேற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரிட்டன் பிரதமர் ஆனார்.
தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனம் மூலம் பலன் அடைந்ததாகத் தற்போது கேமரூன் ஒப்புக் கொண்டதையடுத்து, அரசியல் ரீதியாக கேமரூனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடுமையாக கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டன் நகரில் நேற்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியின் போது பழமை வாத கட்சியே வெளியேறு, கேமரூன் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனிடையே தனது கட்சியினரிடையே பேசிய கேமரூன், கடந்த ஒரு வார காலத்தில் நடைபெற்ற சம்பவங்களால் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.