இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனப் பிரதமர் லீ கெகுயாங் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாக பிரதமர் காரியாலயம் கூறியுள்ளது.
வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதவிர 500 மில்லியன் யுவான் நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சீனப் பிரதமர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
சினாவின் பீஜிங் நகரில் அமைந்துள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க, சீன அரசாங்கம் தயாராக உள்ளது என்று சீன பிரதமர் கூறியுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை விரைவில் ஏற்படுத்திக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.