ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்சிங் முதல் 2 வாரங்கள் விளையாட முடியாத நிலைமை..!

201604080836370087_IPL-match-yuvraj-singh-2-Weeks-not-play_SECVPF

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ்சிங் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் அரைஇறுதியில் ஆடவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் யுவராஜ்சிங்கை ரூ.7 கோடிக்கு ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. ஆனால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் அவர் முதல் இரண்டு வாரங்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாம் மூடி கூறும் போது, ‘யுவராஜ்சிங் போன்ற வீரர் எந்த அணிக்கும் முக்கியமான வீரர். அவர் பேட்டிங்கின் மூலம் வெற்றி தேடித்தரக்கூடியவர் (மேட்ச் வின்னர்) மட்டும் அல்ல. மிடில் ஓவர்களில் பந்து வீச்சிலும் பலம் சேர்க்கக்கூடியவர். மிடில் ஓவர்களில் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தே அவரை ஏலத்தில் எடுத்தோம். ஆனால் வருத்திற்குரிய விஷயமாக, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் இரண்டு வாரங்கள் ஆட முடியாது. காயத்தில் இருந்து எத்தனை நாட்களுக்குள் மீள்வார் என்பது எங்களுக்கு தெரியாது’ என்றார்.

மேலும் டாம் மூடி கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் முழு உத்வேகத்துடன் செயல்படுகிறோம் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வருவதே எங்களது முதல் இலக்கு’ என்றார்.