சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.
இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் ஜனாதிபதி, சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் 140 அரசியல் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் ரஷிய அதிபர் புதினின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் கூட அவர் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வு செய்தியாளர்களின் பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டி இருக்கிறது.
இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பிரபல நடிகர்-நடிகைகள் உள்பட 500 முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
உரிய ஆதாரங்களுடன் கூடிய இந்த குற்றச்சாட்டு வெளியானதும் ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டுர் டேவிட், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பல நாடுகளில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைவர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டியளித்தார். அப்போது, தனது தந்தையின் சட்டவிரோத வெளிநாட்டு பண முதலீட்டில் பலன் அடைந்தது உண்மை என தெரிவித்தார்.
பஹாமாஸ் நாட்டிலுள்ள ஒரு நிதி நிறுவனத்தில் எங்கள் குடும்பம் 5 ஆயிரம் பங்குகளை வாங்கியிருந்தது. சுமார் 30 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 28 லட்சம் ரூபாய்) கொண்ட என்னுடைய பங்குகளை 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் விற்றுவிட்டேன். அவற்றை கடந்த 2010-ம் ஆண்டு நாங்கள் விற்றுவிட்டோம்.
ஒருவேளை நான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்றால், எனக்கு தனிப்பட்ட முறையில் வர்த்தக நோக்கங்களும், முதலீடுகளின் மூலம் பணப்பலன்களை அடையும் கொள்கையும் இருப்பதாக எதிர்காலத்தில் பிறர் என்னை விமர்சிக்க கூடாது என்பதற்காக, நான் இந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே இந்த முடிவுக்கு வந்து, வெளிநாட்டில் இருந்த எனது பங்கு முதலீட்டை அப்போதே கைவிட்டேன் என டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.