வியட்நாமின் புதிய பிரதமராக நிகுயென் சூவான் புக் தேர்வு

 

phuc_OECX_Fotor

வியட்நாம் கம்யூனிஸ்டு நாடு. அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர், அதிபர், பிரதமர் ஆகிய மூவருக்கும்தான் முக்கிய அதிகாரம் உள்ளது. 19 உறுப்பினர்களை கொண்ட அரசியல் விவகாரக்குழு முடிவுகளை எடுக்கிறது.

அங்கு கடந்த வாரம் அதிபர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் வேட்பாளராக கம்யூனிஸ்டு கட்சியால் முன்னிறுத்தப்பட்ட அந்த நாட்டின் சர்ச்சைக்குரிய போலீஸ் துறை தலைவர் டிரான் டாய் குவாங் (வயது 59) வெற்றி பெற்று அதிபரானார்.

இதனிடையே, பத்தாண்டு காலம் பதவியில் இருந்த, முன்னாள் பிரதமர் நிவென் டன் ஜூங் நேற்று பதவி விலகினார். அதனால் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், துணைப் பிரதமராக இருந்த நிகுயென் சூவான் புக் இன்று புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வியட்நாம் பாராளுமன்றம் புதிய பிரதமர் தேர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

சூவானுக்கு மொத்தம் உள்ள 490 பாராளுமன்ற உறுப்பினர்களில் 446 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். பின்னர் உடனடியாக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சூவான் புக் கூறுகையில், “என்னால் முடிந்த அளவிற்கு நான் நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்வேன்” என்று தெரிவித்தார்.

உள்நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள், ஊழல் போன்ற சவால்களைப் புதிய பிரதமர் நிகுயென் சூவான் புக் எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.