வடக்கில் பாதுகாப்புப் பிரிவினரால் தற்கொலை அங்கியொன்று கண்டு பிடிக்கப்பட்டமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது.
2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தற்கொலை அங்கிகள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் தேசிய பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்படுகிறார். தற்கொலை அங்கியுடன் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கக் கோரியுள்ளார் என நிதி இராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் வடக்கில் தற்கொலை அங்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும், குற்றவாளிகள் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். ஆனால் ஊடகங்கள் அவரது செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஊடகங்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
அண்மையில் பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி சம்பவத்தையடுத்து அடிப்படைவாத அரசியல்வாதிகள் அரசுக்கெதிராக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறது. நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலம் முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவைகளாகும் என்றாலும் அண்மையில் தற்கொலை அங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை பற்றியே பேசப்பட்டு வருகிறது.