இன்றைய வீரகேசரியில் ஒரு தமிழ் சகோதரி புனித இஸ்லாமிய மதத்தை தழுவி மஃபாஸா என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளதை அறிந்து மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருவதற்கான பத்திரத்தை தயார் பண்ணுமாறு கூறி இருக்கிறீர்கள் என்று உங்கள் முகப்புத்தகத்தில் எழுதியுள்ளீர்கள்.
உங்கள் அறிவை நான் வியக்க! உங்களுக்கு கலந்துரையாடல் அமைச்சு வழங்கப் பட்ட போது, சும்மா நாலஞ்சு பேரைக் கூப்பிட்டு வச்சுக்கிட்டு கதைத்துக் கொண்டிருக்குற வேலை என்று நினைத்தவர்களும் உண்டு. ஆனால், சரியான மாங்கா மடையர்களை கூப்பிட்டு வைத்து பேசிக் கொண்டிருந்தது மட்டுமில்லாது, அப்படியொரு அறிவாளி வருத்தப் படுகிறார் என்று, மத மாற்ற தடைக்கு அமைச்சரவை பத்திரம் தயார் படுத்தச் சொல்லி, உங்களுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சு வழங்கப் படாமைக்குரிய காரணத்தை தெளிவி படுத்தியதோடல்லாது, உங்கள் அறியாமையை பகிரங்கப் படுத்தியுள்ளீர்கள். அந்த பெண் மதம் மாறியது எவ்வகையில் இந்நாட்டின் சகவாழ்வுக்கு குந்தகம் ஏற்பட்டது என்பது பற்றி நீங்கள் தெளிவு படுத்தவில்லை.
அது பற்றிய தீர்க்கமான அறிவும் உங்களுக்கு இருக்காது. முஸ்லிம் இளைஞர், மட்டகழப்பில் இந்து மதத்திற்கு மாறி தமிழ் யுவதியை கரம் பிடித்த சம்பவம் நடந்தபோது, இந்நாட்டு மக்களின் சக வாழ்வு பாதிக்கப் பட்டதாக நீங்கள் உணர்ந்து வருத்தப் பட்டதாக செய்தி வரவில்லை. கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுவது வெறும் மதத்துடன் நின்று விடுகிறது என்றும் முஸ்லிமுக்கு மதம் மாறும் போது அது ஒரு தனி இனமாகி விடுகிறது என்னும் வார்த்தைகளில் உங்கள் அசலை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
இப்போது உங்கள் உண்மையான கவலை என்ன என்று தெளிவாகிறது. ஏன் ஐயா உமக்கு இந்த வேண்டாத வேலை? உங்கள் அமைச்சில் செய்வதற்கு வேலை இல்லாவிட்டால் அரச செலவில் எங்கேயாவது வெளிநாடு செல்ல வேண்டியதுதானே? பௌத்தர்களும் ஆங்காங்கே இஸ்லாத்துக்கு மதம் மாற்றப் படுகிறார்கள் என்று அங்கலாய்த்திருப்பதிலும் உங்கள் முஸ்லிம் விரோத போக்கு வெளிப்பட்டிருக்கிறது. நீர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பது இவ்வளவு சீக்கிரம் தெரிய வரும் என்று நினைத்திருக்கவில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதில்லை.
மதம் மாறுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டறியுங்கள். அதற்குண்டான தீர்வை முன் வையுங்கள். அதை விட்டு விட்டு யாரோ நண்பர் பத்திரிகை செய்தியைப் பார்த்து கவலைப் பட்டாராம் (அவர் தீவிர பக்தர் அல்ல என்று முகவுரை வேறு) அமைச்சரவை பத்திரம் தயார் படுத்தச் சொன்னாராம். சிறு பிள்ளைத்தனமாக விளையாடுவதற்கு அது உங்கள் கட்சி யாப்பல்ல. இந்த நாட்டின் யாப்பு. உங்கள் போக்கில் விரைவில் மாற்றம் வராவிடில், நீங்கள் தமிழ் ஞானசார என்று பெயர் எடுக்க அதிக நாள் ஆகாது.
அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்