பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கொண்ட பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி

file image

Mahinda_Ranil_Fotor

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு நேற்று சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும், பிரதமருடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்புச் சபை எடுத்த முடிவுக்கு அமையவே, மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மட்டுமன்றி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்படவுள்ளதாகவும் நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.

முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை அகற்றிக்கொள்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கே, பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரமளித்துள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன