தம்மாலோக்க தேரர், சோபித தேரரின் பெயரை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்

sumangala_therar_01

உடுவே தம்மாலோக்க தேரர் தனது சுயநலத்திற்காகவும், இழிவான செயற்பாடுகளுக்காகவும் சோபித்த தேரரின் பெயரை பயன்படுத்தி வருகின்றார் என ஊழலுக்கு எதிரான முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக எந்த சூழ்நிலையிலும் அனுமதி இல்லாமல் ஒருவருடைய பெயரை பயன்படுத்தக்கூடாது. ஆனால் தம்மாலோக்க தேரர், சோபித தேரரின் பெயரை பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என சுமங்கள தேரர் சுட்டிக்காட்டினார்.  

யானைக்குட்டிகள் தொடர்பான குற்றம், மற்றும் தன்மேல் சுமத்தப்பட்டுள்ள ஏனைய குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக தம்மாலோக்க தேரர் மிகவும் சூட்சுமமான முறையில் செயற்பட்டு வருவதாக சுமங்கள தேரர் தெரிவித்தார். 

தம்மாலோக்க தேரர் தொடர்பான அனைத்து குற்றங்களுக்கும் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் இதன்போது கூறினார். 

அதுமட்டுமின்றி தற்போதைய அரசாங்கம் சோபித தேரரை கொலை செய்துள்ளதாக தம்மாலோக்க தேரர் குற்றம் சுமத்திவருகின்றார். இது முற்றிலும் பொய்யான விடயமாகும். உண்மையில் சோபித தேரரை கொலை செய்ய முயற்சித்தது கடந்த அரசாங்கமே என சுமங்கள தேரர் இதன்போது தெரிவித்தார். 

சோபித தேரர் தலதா மாளிகைக்குச் சென்ற வேளையில், அவரை லொறி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாக்கி கொலை செய்வதற்கு கடந்த அரசாங்கம் முயற்சி செய்தது. அந்த சந்தர்ப்பத்தில் சோபித தேரர் தனது வாகனத்தை மாற்றியதால் உயிர் தப்பினாரென சுமங்கள தேரர் வெளிச்சம்போட்டுக் காட்டினார். 

உடுவே தம்மாலோக்க தேரர் தனது குற்றங்களை மறைப்பதற்கு ஊடகங்களின் முன் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஊழலுக்கு எதிரான முன்னணியின் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர் தெரிவித்தார்.