தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் SSP

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எழாவது ஆண்டு (2016.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
– மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் –

 

கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை மண்ணின் வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி 2009.04.05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலைக் கருக்கலில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு அகால மரணமடைந்தார்.

மக்கள் சேவையையும், சமயத் தொண்டையும் தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் எச்.எல்.ஜமால்தீன். அன்பு, பண்பு, பாசம் இவைகளினூடே புன்சிரிப்பு, மென்மையான வார்த்தை இவை அனைத்தும் மக்களைக் கவர்ந்தவை, சிறந்த ஆளுமைப் பண்பைக் கொண்ட ஒரு தலைவனாக தென்கிழக்கு மக்கள் இவரை வரவேற்றனர்;;.

மருதமுனையைச் சேர்ந்த ஹாமீதுலெவ்வை – சீனத்தும்மா தம்பதிகளின் புதல்வாரன எச்.எல். ஜமால்தீன் தனது ஆரம்பக்கல்வியை (1-5) மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் பின்னர் 06-09ம் வகுப்புவரை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கற்றார். க.பொ.த. சாதாரண தர வகுப்பு படிப்பதற்காக 1972ம் ஆண்டு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இணைந்து திறமையாக தேறினார். 1975ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவுப் பட்டப்படிப்புக்காக இணைந்து கொண்டார். பட்டப்படிப்பை சிறப்பாக பூர்ததிசெய்தார்.

22_Fotor

 

தனது தொழில், வேலைப்பழு,பொதுவாழ்வு என்பவற்றுக்கு மத்தயிலும் Post Graduate Diploma in Personal Management, Medical Certificate in Homeopathic Medicine, Diploma course in Human Rights, National Training Course on Public Health Emergency Disaster Management, Master Degree Master in Arts in Public Administration போன்ற கற்கை நெறிகளையும் பூர்த்திசெய்த இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 2009ம் ஆண்டு நடாத்திய சட்டமானிப் பரீட்சையிலும் தோற்றியிருந்தார். தனது கல்விப் புலத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டதுடன் ஏனையவர்களது கல்வி விடயத்திலும் தன்னால் முடியுமான உதவிகளையும் செய்துவந்தார்

1975ம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலிருந்து யாழ் இளவாலை ஹென்றி கல்லூரியின் பாதர் பிரான்சிஸ் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உயர்தரம் கற்று 19 வயதிற்குட்பட்ட அகில இலங்கை ரீதியான உதைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி அவரது சிறந்த விளையாட்டின் மூலம் தனது அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார். இவரின் சிறந்த ஆட்டத்திற்காக கல்வி அமைச்சு ‘சிறந்த வீரருக்கான தங்கப்பதக்கம்’ அணிவித்து இவரை கௌரவித்தது. உதைபந்தாட்டம் மூலம் மருதமுனைக்கு முதன் முதலில் தங்கப் பதக்கம் பெற்று வந்த பெருமை ஜமால்தீனையே சாரும். பாடசாலைக் காலத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாகவும், தலைமைத்துவம் கொண்ட, ஆளுமைத்தன்மை கொண்ட ஒரு மாணவராகவும் இவர் திகழ்ந்தார்.

கல்முனை கிறீன் லைட் விளையாட்டுக்கழகம், மருதமுனை யுனைட்டட் விளையாட்டுக் கழகம், பேராதனைப் பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணி, இலங்கை பொலிஸ் அணி, மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றில் இணைந்து விளையாடியதுடன் மரணிக்கும் வரை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் கௌரவ தலைவராக இருந்து செயற்பட்டார்.

1994ம் ஆண்டு தொடக்கம் மரணிக்கும் வரை (ஒரு ஆண்டு அடங்காது) அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகவும், அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உறுப்பினராகவும் பணி செய்தார். 2004ம் ஆண்டு மலேசியாவுக்கான விளையாட்டுப் புலமைப் பரிசில் பெற்றுச் சென்றார். மேலும் மசூர் மௌலானா விளையாட்டு மைதான அபிவிருத்தியிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதுடன் மைதானத்தில் புதிய கட்டிட நிர்மாணிப்புக்கு முழு மூச்சாக செயற்பட்டார்.

வறியவர், செல்வந்தர் என்று பாராது தனது சேவையை சமூகத்துக்கும், தேசத்துக்கும் ஆற்றவேண்டும் என்பதற்காக 1980.04.16 அன்று இலங்கை பொலிஸ் சேவையில் உதவிப் பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டார். களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறி நாட்டின் பல இடங்களில் பணிசெய்தார். பின்னர் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்படி இவரின் தகைமைகளின் அடிப்படையில் 1980.12.24ம் திகதி முதல் பொலிஸ் பரிசோதகராக (ஐP) நியமனம் பெற்றார்.

மேலும் இத்தீர்ப்பின்படி 31.05.2001ம் திகதி தொடக்கம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகவும் (ASP) பதவி உயர்வு பெற்றார். தோற்றுப் போகாத இவரது அறிவும், துணிவும் பொலிஸ் அத்தியட்சகர் (SP) வரை உயர்த்தியது இப்பதவியில் இருந்து கொண்டு மரணிக்கும் வரை சமூகத்துக்குப் பணி செய்தார். பொலிஸ் சேவையில் இருக்கும் போது பல புலமைப்பரிசில்களைப்பெற்று வெளிநாடு சென்றார்.

 

24_Fotor

2007.06.07ம் திகதி தொடக்கம் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற ளுP ஜமால்தீன் 2007.11.10ம் திகதி தொடக்கம் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பிரதிப் பணிப்பாளராக மரணிக்கும் வரை கடமை புரிந்தார். மருதமுனையில் 1வது பொலிஸ் அத்திட்சகர் என்ற பெருமையை தனக்கும் மருதமுனை மண்ணுக்கும் தேடிக்கொடுத்தார்.

சுமையப்;பணியிலும் தன்னை பூரணமாக இவர் அர்ப்பணித்தார். 1984 – 1986ம் ஆண்டு வரை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கையாளராகவும் பணியாற்றியதுடன் 2006 – 2008ம் ஆண்டு வரை இப்பள்ளிவாசலின் தலைவராகவும் பணி புரிந்ததுடன் மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய கட்டிட நிர்மாணப் பணிக்கென தன்னை அர்ப்பணித்ததுடன் பள்ளிவாசலின் ஒரு பகுதியை அழகுற கட்டி முடித்து திறந்தும் வைத்தார்.

சமூகப் பணியிலும் தன்னை அர்ப்பணித்த ளுP ஜமால்தீன் 1995ம் ஆண்டு ஹைக்றோ சமூக அபிவிருத்தி சங்கத்தை நிறுவியதுடன் அதனூடாக சமூகப் பணிசெய்தார். மஸ்ஜிதுல் கபீர் பிரதான வீதி முன்முகப்பு அமைப்பு, மஸ்ஜிதுல் கபீர் கிராண்ட மார்க்கட் என்பவற்றை அழகுற அமைக்க உதவினார். நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மக்கள் பணிசெய்தார். இதனால் வரவேற்பைப்பெற்றார். இன்னும் மக்கள் உள்ளங்களில் வாழ்கின்றார்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது அழிக்கப்பட்டிருந்த மருதமுனையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தன்னை பூரணமாக அர்ப்பணித்ததார். மருதமுனை மக்களின் வாழ்வாதார விடயங்களில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதுடன் தன்னால் முடியுமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி அம்மக்களின் துயர் துடைக்க உதவினார். 65 மீட்டர் சுனாமி வீடமைப்புத்திட்டத்தை நோக்கி செப்பனிடப்பட்டிருக்கும் கிறவல் வீதியை செப்பனிட முழு மூச்சாக செயற்பட்டார்.

சமாதானம், சகவாழ்வு, அன்னியோன்னியம், ஏனைய மதங்களை மதித்தல் என்பனவற்றை தன்னில் கொண்டிருந்தார் சமாதான வாழ்க்கைக்கு இவர் அதிகம் உதவினார். பயங்கரவாத பிரச்சினைகளின் போதும், இன முரண்பாடுகளின் போதும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்க பெரிதும் பாடுபட்டார். குறிப்பாக தமிழ் – முஸ்லிம் விரிசலின் போது ஒரு சமாதானப் புருஷராக தொழிற்பட்டார். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் நன்மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர் ஜமால்தீன். மூன்று இன மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்து தொழிற்பட்டார். இதனால் மனித உள்ளங்கள் எங்கும் வாழ்பவராக உள்ளார். இதனால் மரணித்தும் மரணிக்காது மனித உள்ளங்களில் வாழும் மாமனிதர் என மக்கள் போற்றுகின்றனர்.

கல்விப் பணியில் ஸம்ஸ் மத்திய கல்லூரியின் நலன்புரிச் சங்கத்தை நிறுவி இப்பாடசாலைக்காக உழைத்தார். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது அழிந்துபோன மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய காணி கொள்வனவு, புதிய பாடசாலையின் கட்டிட நிர்மாணப் பணி என்பனவற்றில் பல சவால்களுக்கும், தடைகளுக்கும் மத்தியில் தன்னை அர்ப்பணித்து வெற்றி கண்டார். ஸம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிட நிhமாணப் பணியை சிறப்புற ஆரம்பித்துவைத்துவிட்ட ஒரு சில தினங்களுக்குள் மரணித்துவிட்டார். இன்று ஸம்ஸ் பாடசாலை தலை நிமிர்ந்து காட்சியளிக்கின்ற போது இப்பாடசாலையும் பாடசாலைச் சமூகமும் இவரை எண்ணி கண்ணீர் வடிக்கின்றது.

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் வருடாவருடம் நடாத்தி வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி பரிசளித்து கௌரவித்து வரும் நிகழ்வு SP யின் தனிச்சிந்தனை. தொடராக 13 வருட காலம் இதனை அவர் நடாத்தி வந்தார். கழகத்தின் உதவியுடன் இதனால் கல்விச் சமூகத்தின் வரவேற்பை இவர் பெற்றார்.

மருதமுனைக் கிராமத்pற்கு மட்டுமல்ல முழு தென்கிழக்குப் பிரதேசத்திற்குமே கலங்கரை விளக்கமாக பிரகாசித்துக்கொண்டிருந்த மர்ஹும். ஜமால்தீன் இன்றுடன் உயிர்நீத்து ஏழு வருடம் கடந்தாலும் அவரது உணர்வுகளும், உண்மையான சேவைகளும் மக்கள் மனதில் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இனி அவர் விட்டுச்சென்ற அறப் பணிகளை நல்ல முறையில் தொடர்ந்து முன்கொண்டு செல்வதே அன்னாருக்குச் செய்யும் கைமாறாக அமையும். அன்னாருக்கு ஒளிமயமான கப்றுடைய வாழ்வும், உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கமும் கிடைக்க இருகரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்திப்போமாக ஆமீன்.