மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை தமிழர்கள் விரும்பவில்லை – சுமந்திரன்

Sumanthiran_6

 

மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை, தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், வெடிபொருட்கள் மீட்கப்படுவது சாதாரண விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சிலர் ஊளையிடுவதாக குறிப்பிட்ட அவர் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் ஜனநாயக வழியிலே தமது உரிமைகளை பெற விரும்புகின்றனர் அவர் கூறினார். 

25 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சாதாரண விடயம் எனக் கூறிய அவர் இன்னும் பத்து வருடங்களின் பின்னரும்கூட பழைய வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்படாலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தலைதூக்குகின்றது என்று தெற்கில் சிலர் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் குறித்த தரப்பினர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாகவும் அவர்களின் நோக்கம் இனி நிறைவேறாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயக வழியிலே உரிமையை பெறவே வடகிழக்கு மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்த அவர் அதனையே தேர்தலில் மக்கள் நிரூபித்துக் காட்டியரதாகவும் மேலும் தெரிவித்தார்.