20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8–ந்தேதி தொடங்கியது.
தகுதி சுற்று முடிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஆங்காங், ஓமன், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ‘சூப்பர் 10’ சுற்றுக்கு முன்னேறின.
‘சூப்பர் 10’ சுற்று ஆட்டம் கடந்த 15–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. கடந்த 30–ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், 31–ந்தேதி நடந்த 2–வது அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவையும் வீழ்த்தின.
இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (3–ந்தேதி) நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து– டாரன்சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் எந்த அணி 2–வது முறையாக உலககோப்பையை வெல்லப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி 2010–ம் ஆண்டும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2012–ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. வெற்றி பெறும் அணி உலககோப்பையை 2–வது முறையாக கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெறும்.
இங்கிலாந்து அணியில் ஜோரூட், ஜேசன்ராய், ஹால்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், மொய்ன் அலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை அரை இறுதியில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அந்த அணி இங்கிலாந்தை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறது.
வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ்கெய்ல், சார்லஸ், லெண்டில் சிம்மன்ஸ், சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸ்சல், பிராவோ, டாரன்சேமி போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளுமே உலக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.