இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் மேற்பார்வையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அரையிறுதி வரை முன்னேறியது. அதன் பின்னர், இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணியின் செயல்பாடு, பேட்டிங், பந்துவீச்சு பயிற்சியாளர்களின் முயற்சிகள் திருப்தியளிப்பதாக சச்சின், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரை கொண்ட பிசிசிஐ ஆலோசனைக் குழு அங்கீகரித்து, அவர்களின் ஒப்பந்தக் காலத்தைக் கடந்த வருடம் நீட்டித்தது. 6-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இடைப்பட்ட 7 மாதத்துக்கு ரவி சாஸ்திரி, பேட்டிங் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு ஆலோசகர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலத்தை ஆலோசனைக் குழு நீட்டிக்குமாறு பரிந்துரைத்தது. அப்போதைய பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்குர் ஆகியோர் இந்தப் பரிந்துரைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை முடிந்ததையடுத்து, ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்படுமா அல்லது அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பிசிசிஐ செயலர், அனுராக் தாக்குர் கூறியதாவது:
”ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைந்தது. இப்போது முழு நேரப் பயிற்சியாளரைத் தேடிக்கொண்டு வருகிறோம். இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனைக் குழு முடிவெடுக்கும். ஒரு முழு நேரப் பயிற்சியாளர், இயக்குநர் என இனி தனிப் பதவி இருக்காது. ஒரே ஒரு பதவிதான்.
ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரவி சாஸ்திரியைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனைக் குழுதான் முடிவு செய்யும். பயிற்சியாளர் தகுதி கொண்ட நபர்களின் பட்டியலை அனுப்புமாறு ஆலோசனைக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆலோசனைக் குழுவின் கூட்டம் ஏப்ரல் 3-க்குப் பிறகு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.