இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக தென் ஆப்ரிக்காவின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் உரையாற்றியபோதே வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தென் ஆப்ரிக்காவுடன் ஏற்கனவே பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அடுத்தகட்டமாக நிபுணர் குழுவொன்று அங்கு சென்று கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா செல்லும் நிபுணர் குழு பெற்றுக்கொள்ளும் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பபைப் பெற்று அதை அரசு நடைமுறைபடுத்தும் எனவும் அவர் அக்கறைப்பற்றில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் இலங்கையில் யாரும் காணாமல் போகாமல் இருக்கும் நோக்கில், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து அரசு செய்லபடவுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.