டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணியில் முன்ரோ அதிகபட்சமாக 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 32 ரன்களும், ஆண்டர்சன் 28 ரன்களும் எடுத்தனர். குப்தில், டெய்லர் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு ஆட்டம் முற்றிலும் இங்கிலாந்தின் வசம் கைமாறியது. அடுத்த 10 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே எடுத்ததோடு 7 விக்கெட்டுக்களையும் நியூசிலாந்து அணி பறிகொடுத்தது. இதனால் 180 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த நியூசிலாந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனையடுத்து, 154 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ராய் மற்றும் ஹால்ஸ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 4.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 50 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
8.2 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஹால்ஸ் 20 எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரூட் களமிறங்கி ராய்க்கு ஒத்துழைப்பு அளித்து நிதானமாக விளையாடினார்.
இங்கிலாந்து அணி 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. வெற்றி வாய்ப்பு பிரகாசமானதை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராய் 44 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மோர்கன் டக்-அவுட் ஆனார்.
இதனையடுத்து ரூட்டும், பட்லரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. நியூசிலாந்து அணியின் சோதி வீசிய 17-வது ஓவரில் ரூட் ஒரு பவுண்டரியும், பட்லர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களையும் விளாசினர். இதனால் அந்த ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்டது.
18-வது ஓவரின் முதல் பந்தில் பட்லர் சிக்ஸர் விளாச இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய ராய்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இங்கிலாந்து அணி மோதும்.