அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நான்காயிரம் கோடி ரூபாயை திருப்பி அளிக்க விஜய் மல்லையா முன்வந்துள்ளார்.
அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து ஆஜர்படுத்தும்படி ஜாமினில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஐதராபாத் கோர்ட் கடந்த 13-ம் தேதி பிறப்பித்தது.
பிரபல தொழில் கட்டமைப்பு நிறுவனம் தொடர்ந்த சுமார் எட்டரை கோடி ரூபாய் செக் மோசடி வழக்கில் கடந்த பத்தாம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள ஒரு கோர்ட் முன்னர் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த இரண்டாம் தேதி விஜய் மல்லையா ரகசியமாக இங்கிலாந்துக்கு சென்றுவிட்டதாக தெரியவந்தது.
தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா மற்றும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரகுநாத் ஆகியோரை கைது செய்து வரும் ஏப்ரல் 13-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அவருக்கு எதிராக மேலும் சில பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்ட்டுள்ள நிலையில் விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் அளித்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்நிலையில், கடன்தொகையை செலுத்த முடியாமல் தள்ளாடி, முடங்கிப்போன கிங் பிஷர் நிறுவனம் மற்றும் விஜய் மல்லையா சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சீலிட்ட உறையில் கடிதவடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க விஜய் மல்லையா முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருவாரத்துக்குள் பரிசீலித்து முடிவுசெய்யும்படி அவருக்கு கடன் அளித்த வங்கிகளை அறிவுறுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட், மேற்படி வழக்கின் மறுவிசாரணையை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.