முதல் அரைஇறுதியில் நியூசிலாந்து – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

England vs New Zealand T20 WC 2016 Semi Final Match_Fotor

 

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப்1-ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப்2-ல் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. நடப்பு சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டின.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி நியூசிலாந்து தான். சூப்பர்-10 சுற்றில் இந்தியா (47 ரன் வித்தியாசம்), ஆஸ்திரேலியா (8 ரன்), பாகிஸ்தான் (22 ரன்), வங்காளதேசம்(75 ரன்) ஆகிய அணிகளை புரட்டியெடுத்து கம்பீரமாக அரைஇறுதிக்கு வந்திருக்கிறது. இதுவரை நான்கு வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய போதிலும் அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, நியூசிலாந்து பிரமாதமாக விளையாடி இருக்கிறது.

அந்த அணியின் வெற்றிகளை அலசி ஆராய்ந்தால் சுழற்பந்து வீச்சாளர்களே பக்கபலமாக இருப்பது புரியும். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் இதுவரை 20 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள். சூப்பர்-10 சுற்றில் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் அதிக விக்கெட்டுகளை கபளீகரம் செய்த அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. ஒட்டுமொத்தமாக அவர்களது பவுலர்கள் ஓவருக்கு சராசரியாக 5.97 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மற்ற அணிகளை காட்டிலும் சிக்கனத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் சான்ட்னெர் (9 விக்கெட்), சோதி (8 விக்கெட்) ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் மட்டுமே அரைசதம் அடித்திருக்கிறார். என்றாலும் ஒருங்கிணைந்த அணியாக முதல்முறையாக இறுதி சுற்றை அடையும் வேட்கையுடன் வரிந்து கட்டி நிற்பார்கள்.

இதற்கு நேர்மாறானது இங்கிலாந்து அணி. அதாவது இங்கிலாந்து அணி பேட்டிங்கை தான் மலை போல் நம்பி இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா (2 விக்கெட் வித்தியாசம்), ஆப்கானிஸ்தான் (15 ரன்), இலங்கை (10 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக்கில் 230 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனை படைத்தது மலைப்பான விஷயமாகும்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (168 ரன்), ஜோஸ் பட்லர் (123 ரன்), ஜாசன் ராய் (105 ரன்), கேப்டன் மோர்கன் உள்ளிட்டோர் பேட்டிங்கில் மிரள வைக்கக்கூடியவர்கள். ஆக நியூசிலாந்தின் சுழலுக்கும், இங்கிலாந்தின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாகத் தான் இது இருக்கும். 2-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து ஏற்கனவே 2010-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இதில் சுழற்பந்து வீச்சின் தாக்கமும் இருக்கும்.