லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அரச தரப்பு சட்டத்தரணி திலீப் பீரிஸ் நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஏனைய குற்றச் செயல்களைப் போன்றல்லாது இராணுவ அதிகார வலயத்திற்குள் இடம்பெற்ற குற்றச் செயல் என்பதனால் விசாரணைகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மனுதாரர் மட்டுமன்றி நீதிமன்றையும் அவமரியாதை செய்யும் வகையில் சில தரப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் சாட்சியாளரான சாஜன் மேஜர் ரண்பண்டாவை கிரித்தலே இராணுவ முகாமில் வைத்து கொலை செய்ய சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நிகவரட்டி காவல் நிலையத்தில் ரண்டா முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை துரித கதியில் பூர்த்தி செய்து அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் சந்தேக நபர்களுக்கு உயர் நீதிமன்றினாலேயே பிணை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 1ம் திகதி வரையில் விளக்க மறியல் வைக்குமாறு மேலும் உத்தரவிட்டுள்ளார்.