கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி நிரந்த நியமனங்கள் பெறாத தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

கடந்த அரசாட்சியில் தொண்டர் ஊழியர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி நிரந்த நியமனங்கள் பெறாத ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் பாரபட்சமின்றி வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

hafees nazeer jawath aarief
சுகாதார தொண்டர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய யுவதிகள் நேற்று 29 கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரை சந்தித்து தங்களுக்கான நியமனங்கள் குறித்து கலந்தாலோசித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கக் குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை நேற்று 29 சந்தித்து அவர்களது, நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இன்றி எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். 

இங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தீர்வு காணப்படாமல் விடப்பட்ட இப்பிரச்சினையால் இன்று நியமனங்கள் வழங்குவதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் சரியான தகவல்கள் திரட்டப்பட்டு உரிய ஆவணங்கள் பெறப்பட்ட பின்னர் இவர்களுக்கான தீர்வு குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.