புதிய போராளியும் – தலைவரும் : சூடான கேள்வி பதில் !

 
 RAuff hakeem slmc
 
 
இப்னு ஜமால்
 
 
புதிய  போராளி – சேர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
தலைவர் – வஅலைக்கும் வஸ்ஸலாம். தம்பி புதிதாக இருக்கிறீங்க. இதற்கு முன்பு நான் உங்களை கண்டதில்லையே
 
புதிய போராளி – சேர் மாநாட்டுக்கு சும்மா புதினம் பாக்கத்தான் வந்தேன். ஆனால் இங்கு வந்த சனங்களை பார்த்துவிட்டு நான் மயங்கியே போய்விட்டேன். இப்படி ஒன்றை நான் பார்த்ததே இல்லை. அந்த நிமிடத்திலிருந்து நான் இந்தக் கட்சியிலே சேர்ந்து  விட்டேன் சேர் .
 
தலைவர் – இதற்கு முன்பு எந்தக் கட்சியிலே இருந்தீங்க தம்பி?
 
புதிய போராளி – எதுலயும் நிரந்தமராக இல்ல சேர். இதுதான் எனக்கு முதல்கட்சி.
 
தலைவர் – அப்படியா? நல்லம் தம்பி சந்தோசம். அவசரமாக ஒரு முக்கிய பேச்சுவார்த்தை இருக்கின்றது. நான் போய் வருகிறேன்.
 
புதிய போராளி – சேர் உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் சேர்?
 
தலைவர் – தம்பி செல்பி வேண்டாம். நீங்க எனக்கு பக்கத்திலே வந்து நின்று கொண்டு போட்டோ எடுங்க. நான் தெரியாதவர் போல போஸ் கொடுப்பேன்.
 
புதிய போராளி – நீங்க இவ்வளவு பெரிய தலைவராக இருந்து கொண்டு எப்படி சேர் ஒலுவிலில் சின்ன ஒரு கடையிலே தேநீர் குடிக்க முடிந்தது?
 
தலைவர் – அதுவா தம்பி? ஒலுவில் சனங்க எனக்கு எதிராக கிளம்புற மாதிரி தெரிஞது. எனக்கு எதிரான கோஷங்களும் எழும்பிச்சி. அதுதான் அந்த நாள் முழுவதும் ஒலுவிலில் சாரான் டீசேட்டுடன் சென்று எல்லோருக்கும் சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு சின்னக் கடையில தேநீர் குடிச்சேன்.
 
புதிய போராளி – அப்ப யார் சேர் உங்களை  தேநீர் கடையில வைத்து மிகவும் சாதாரண மனிதராக புகைப்படம் எடுத்தது?
 
தலைவர் – தம்பி இந்த அரசியலை நீங்க புரிஞ்சிக்க மாட்டீங்க. உங்களுக்கு இன்னும் 30 வருசமாவது தேவைப்படும். மூத்த போராளிகள் உள்ள ஒலுவில் மக்களே அதனை 20 வருடங்கள் கடந்தும் இன்னும் புரிஞ்சிக்கலயாம்…..
 
புதிய போராளி – அப்படியென்றால் ஒலுவில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு..?
 
தலைவர் – அது நான் சொன்ன ஸலாமும் நான் குடித்த தேனீர் புகைப்படமும் போதும் இன்னும் பத்து வருசத்திற்கு எனக்கு எதிராக எந்த பிரச்சினையும் ஒலுவிலில் வராது தம்பி
புதிய போராளி – சேர் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பெரும் தொகை பணம் செலவாகியிருக்குமே சேர்?
 
தலைவர் – பணம் , கட்சியின் சொத்து அதன் வருவாய் பற்றி பேசக் கூடாது. அது எனக்கு மாத்திரம் தனிஉடமையான விடயம். இதில் யாரும் கையடிக்க இயலாது. இது பத்தி உயர் பீட உறுப்பினர்களே என்னிடம் கேட்டதில்லை. நீங்க புதிய போராளி என்பதினால் உங்களை மன்னித்து விடுகின்றேன்.
புதிய போராளி – மன்னித்து விடுங்க சேர்.
 
தலைவர் – சரி… சரி… தம்பி நீ கடுமையாக கேள்வி கேட்பது போல தெரிகின்றது. ஒனக்கு இந்தக் கட்சி பொருத்தமில்லையே! நீ ஏன் இந்தக் கட்சியைத் தெரிவு செய்தாய்?
 
புதிய போராளி – இந்த கூட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு பல நன்மைகள், தொழில் வாய்ப்புக்கள் மற்றும் உரிமைகள் எல்லாம் கிடைக்க போறதாய் போஸ்டர்கள் பார்த்தேன். வீதிகள் எங்கும் பெரிய பெரிய பெனர்கள் பார்த்தேன் அது தான் இந்தக் கட்சிக்கு வந்தேன் சேர்.
 
தலைவர் – அப்படியா? …….
 
புதிய போராளி – ஏன் சேர் என்னிடம் இப்படி கேட்கின்றீங்க?
 
தலைவர் – இல்லடா தம்பி இருபது – முப்பது வருசமாக இந்தக் கட்சியில் இருக்கும் மூத்த போராளிகள் கூட இப்படி கேள்விகள் கேட்பதில்லை டா. அது தான் சும்மா கேட்டேன் தம்பி .
 
புதிய போராளி – சேர் மூத்த போராளிகள் தொழில் தரவேண்டும், அபிவிருத்தி வழங்க வேண்டும், உரிமை களுக்காக போராட வேண்டும் என்று உங்களுக்கு எதிராக கேள்வி கேட்டு ஒன்று திரண்டால் நீங்க என்ன செய்வீங்க சேர்.
 
தலைவர் – நான் இந்தக் கூட்டத்தில் ஒரு பிரகடனத்தையும் நறைவேற்றவில்லையே அப்புறம் எப்பிடிடா தம்பி ….
 
அதத்தான் ரெண்டு நாளைக்கு முன்னர் செய்தேனே. 
 
புதிய போராளி – நீங்க எதனைச் சொல்ரீங்க சேர்.
 
தலைவர் – அது தான் தம்பி நாடுபூராகவுமுள்ள மூத்த போராளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாங்க தானே.
புதிய போராளி – எது சேர்?
 
தலைவர் – அதான் அந்த ஆலமுனைக் கூட்டத்தை சொல்கின்றேன் டா தம்பி.
 
புதிய போராளி – நாட்டின் பெரிய தலைவர்கள் எல்லோரும் வந்த கூட்டத்தை சொல்ரீங்களா சேர்?
 
தலைவர் – எங்கடா அவங்க வந்த? நான் அழைத்து வரப்பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் டா தம்பி. இப்படி ஏதாவது செஞ்சால் தான் தம்பி நம்புட கதையைக் கேட்பானுகள்.
 
இவ்வாறான தலைவர்களை அழைத்துவருவதுடன் தம்பி என்னிடம் ஒரு மந்திரமும் ஒரு போட்டோவும் இருக்கி. அதனை வைத்து நான் மூத்த போராளிகளை கட்டுப்படுத்தி அப்படியே அமுக்கி விடுவேன்.
 
புதிய போராளி – அது என்ன மந்திரம் சேர்?
 
தலைவர் – கொஞ்சம் பொறு தம்பி போணில் போட்டுவிடுகின்றேன் கேளு.
‘தௌசண்ட்’ விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் எழுந்து வந்தான். 
 
புதிய போராளி – சேர்… சேர்.. சேர்… இந்த மந்திரத்தை நிப்பாட்டுங்க. என்ற இரத்தம் எல்லாம் அப்படி கொதித்து எழும்புது சேர்.
 
தலைவர் – தம்பி இன்று வந்த உனக்கே இப்படி என்றால் 15 வருசமாக என்னுடைய தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் மூத்த போராளிகளின் இரத்தம் எப்படி கொதிக்கும்?
 
எனக்கு எதிராக கிளம்பியவர்களை எல்லாம்  அப்படியே கூட்டத்தை கூட்டி இந்த மந்திரத்தை போட்டால்  அப்படியே என்னுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டுவிடுவார்ககள் தம்பி.
 
புதிய போராளி – இரண்டாவது அது என்ன சேர் போட்டோ ஏதோ இருக்கி என்றீங்க.
 
தலைவர் – தம்பி அவரைக் காட்டினாத்தான் எல்லோரும் நம்புட கதைகளை கேப்பானுகள் போல இருக்கி. இல்லாட்டி குளிர்பிரதேசத்திலிருந்து வந்த நான் உரிமை பேசுற அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை மடையனாக்கலாமாடா தம்பி.
 
புதிய போராளி – சேர் இந்த மாபெரும் கூட்டத்தினால் அம்பாறை முஸ்லிம்களுக்கு கனக்க நன்மைகள் நடக்கப்போகுதாம். நீங்க நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க போறீங்க என்று எல்லோரும் பேசிக்கிறாங்க சேர். சுவலெ;லாம் ஒங்குட போஸ்டர்கள் தான் சேர். அது என்ன தீர்வு சேர்?
 
தலைவர் – தம்பி நான் தலைவராகி 15 வருசமாச்சி. இந்த 15 வருசத்திலே நான் இந்த அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் எந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கேன்?
 
புதிய போராளி – என்னுடைய நாற்பது வயதுக்கும் அப்படி நடந்தாக தெரியல்ல சேர்.
 
தலைவர் – அதைத்தான் என்  ஆயுள் இருக்கும் வரைக்கும் நான் செய்யப் போறன். டேய் தம்பி – இந்தப் பிரச்சினைகளை தீர்த்தா எனக்கு இங்கு எந்த வேலையும் இருக்காதுடா. புலியை ஒழித்த மகிந்த நிலைமையைப் பாருடா தம்பி. அப்படித் தான் நானும் இப்பிர்ச்சினைகளை தீர்த்தா என்ட நிலைமையும் வரும் டா!
 
புதிய போராளி -இப்படி செஞ்சா உங்குட தலைமைத்துவப் பதவிக்கு ஆபத்து வராதா சேர்?
 
தலைவர் – தம்பி 15 வருசமா என்னுடைய தலைமைத்துவத்தக்கு கீழ் இருக்கும் மூத்த போராளிகளே இப்படி கேட்பதில்லை. நீ என்னடா தம்பி புதுசா புதுசா யோசிக்கிறாய்.
 
டேய் தம்பி நீ கேள்விக்குறியுடன் தலைமைத்துவத்திற்கு பிரச்சினை வராதா என்று கேட்பது போல் அம்பாறை முஸ்லிம்கள் முற்றுப் புள்ளியுடன் தலைமைத்துவத்திற்கு பிரச்சினையே வராது. இவர் தான் சரியான தலைமைத்துவம் என்று நம்பிக்கொண்டிருக்கிறாருகள்ரா..!!
 
 மெதுவாய் பேசுடா தம்பி. அவனுகள்ர காதகளில் ஏதாவது கேட்டுடப் போகுது. இந்த மாங்காய் மடையன்கள் இப்படி இருக்கும் வரை எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லடா தம்பி.
 
எனக்கு கீழே ஒரு மிகப் பெரிய பீடம் ஒன்று இருக்கின்றதுடா தம்பி. அந்த பீடம் ஆரம்பத்தில் 25 பேர் தான் இருந்தாங்க. அப்போதுதான் எனக்கு எதிராக சதி நடந்தது. அந்த சதியை முறியடித்துவிட்டு உடனே செய்தது அந்த பீட உறுப்பினர்களை 70 என்பது கணக்கிலே கூட்டி வெச்சிருக்கேன். அந்த பீடத்திலே இருப்பவர்களில் அதிகமானவர்கள் என்னுடைய ஏரியா ஆக்கள். அவர்கள் யாரும் எனக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.
 
புதிய போராளி – நீங்க ஏன் சேர் இதுவரைக்கு அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு கெபினட் அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுக்க வில்லை?
 
தலைவர் – டே தம்பி வாயில மண். வாயைக் கழுவு. மெதுவா பேசுடா. இது இவனுகளில் கேட்கப்போகுது. அம்பாறையில் யாராவது கெபினட் அமைச்சராக வந்தானுகள் என்றால் இந்த இயக்கத்தின் தலைமைப்பதவியும் அவன்ட பக்கம் சாஞ்சிடும் டா தம்பி. அம்பாறை தான் இந்த இயக்கத்தின் கோட்டை. அதனால் தான் நான் அதனை இரண்டு மூன்றுக்கா உடைச்சி கொடுத்திருக்கேன்.
 
புதிய போராளி – சேர் அடுத்த தலைவராக உங்களது இயக்கத்தில் நீங்கள் யாரை நியமிக்க எண்ணியுள்ளீர்கள்?
 
தலைவர் – யாருடா தம்பி? அடுத்த தலைவரா? நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் அந்தக் கதைக்கு இடமே இல்லை. எனது மரணத்திற்கு பிறகு யாராவது என்ன செஞ்சாலும் எனக்கு என்ன? இது என்ன நான் உருவாக்கின இயக்கமா?
 
புதிய போராளி – அப்படி உங்களுக்கு எதிராக செயற்பட்டால் என்ன செய்வீர்கள் சேர்?
 
தலைவர் – எனக்கு எதிராக செயற்ட யார் இருக்கிறா? பழசிகளில் இன்னும் ரெண்டு மாத்திரம் தான் எஞ்சியிருக்கு. அவிய ரெண்டு பேரும் சீக்கிரமா விலகிவிடுவாங்க டா! நான்  மேடையில் நல்லா குடுத்திருக்கின்றேன்.
 
அப்படி விலகாவிட்டால் தேசியப்பட்டியலுக்காக தலைவர் மாமனிதர் தியாகத்துடன் உருவாக்கிய இந்த இயக்கத்தை அழிக்க சிலர் முனைகின்றார்கள்.  என்று எனக்கு எதிராக எழும்புகின்றவர்களை எல்லாம் மாமனிதரின் பெயரிலும் இந்த இயக்கத்தின் பெயரிலும் போட்டு விடுவேன். அதன் பிறகு அவர்கள் அவுட். இந்த சாணக்கியம் எல்லாம் உனக்கு எங்கடா புரியப்போகுது?
 
புதிய போராளி – சாணக்கியம் என்றால் என்ன சேர்?
 
தலைவர் – டே தம்பி 20 வருசமாக மூத்த போராளியாக இருப்பவனுகளுக்கு கூட வராத டவுட் ஒனக்கு என்னடா புதுசா?
 
டே தம்பி சாணக்கியம் என்றால் சாணக்கியம் தான்டா.
 
புதிய போராளி – சேர் இதுவரை ஏன் நீங்க மாமனிதரின் மரணம் தொடர்பில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்து முடிவைப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை?
 
தலைவர் – நான் எப்படிடா தம்பி விசாரணைக்குழுவைக் கோருவது? அப்படி கோரினால் தேசிய தலைவர்கள் என்னிடம் கோபிக்கமாட்டார்களா? 
 
பாருடா தம்பி யார் யாருடன் தேசிய ரீதியில் கூட்டணி அமைச்சிருக்கிறார்கள் என்று.  எப்ப என்ன மாற்றம் நடக்கும் என்று தெரியாதுடா. நான் விசாரணைக் குழுவைக் கோர அது என்ட அரசியலுக்கு சிக்கலாயிடும் டா தம்பி.
 
நல்ல ஆட்சியிலே இந்தக் கட்சியில் இருக்கேன். போன ஆட்சியிலே அந்தக் கடசியிலே இருந்தேன். அதுக்கு முந்திய ஆட்சியிலே இந்த ரெண்டு கட்சியும் இல்லாம என்னவொரு கட்சியிலே இருந்தேன். அடுத்த தேர்தல எந்தக் கட்சியில இருப்பேன் என்று எனக்கே தெரியாதுடா தம்பி.
 
இப்படி இருக்கும் போது நான் எப்படி விசாரணைக்குழுவைக் கோருவது.
மாமனிதரின் மரணத்தை வச்சி தான்டா நிறைய அரசியல் செய்யலாம் டா தம்பி.
 
நீ புதிய போராளிதானடா தம்பி அதுதான் உனக்கு தெரியாது. நான் வருசத்திற்கு வருசம் கத்தம் பாத்திகா கொடுக்கிறது.
 
புதிய போராளி – கத்தம் பாத்திகாவெல்லாம் கொடுக்கிறீங்க சேர். அதேபோல தொழில் வாய்ப்புக்களையெல்லாம் கொடுக்குறீங்க, கொடுக்கப்போறீங்க என்று எல்லோரும் சொல்றாங்க. எனக்கும் ஏதாவது போட்டுத் தாங்க சேர்.
 
தலைவர் – நீ நம்புட இயக்கத்தின் புதிய போராளி. ஓனக்கு தராம யாருக்குடா கொடுக்கப்போறேன். நீ ஒடனே கொழும்புக்கு ஒன்ட பயோடேட்டாவை எடுத்து வாடா தம்பி. நான் பாக்கிறேன்.
 
புதிய போராளி – சேர் மயக்கமடைஞ்சியிருக்கும் இந்த மூத்த போராளிகளின் கூட்டம் முடிந்து நீங்க கொழும்பு போய் எப்ப மீண்டும் அம்பாறை மாவட்டத்திற்கு வருவீங்க சேர் ?
 
தலைவர் – நான் அடுத்த மாநாட்டு கூட்டத்திற்கு நிச்சயமா வருந்துடுவேன் டா தம்பி. அதுபோல இலக்சன் ஏதாவது வந்தா இங்கு வரவேண்டியிருக்கும். அதுக்குள்ள மூத்தபோராளிகளின் மௌத்து , கல்யாணம் , காவீன், என்றால் என்ன செய்வது அதுக்கும் வரவேண்டிக் கிடக்குடா தம்பி !