ரஷ்யாவில் பொது மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிபர் விளாதிமிர் புதின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் வரை சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. எனினும், பெரும்பாலான மக்கள் அவரை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இண்டிபெண்டன்ட் லெவேடா மையத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி 73 சதவீத வாக்காளர்கள் புதின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டு 83 சதவீதமாக இருந்தது. 19 சதவீத வாக்காளர்கள் அவர் மீது நம்பிக்கை இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். இது சென்ற ஆண்டு 14 சதவீதமாக இருந்தது.
சிரியா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் ரஷ்யாவின் தலையீடு அந்நாட்டை உலக அளவில் மேலும் பிரபலமாக்கியுள்ளது. உலக அரங்கில் ரஷ்யா ஒரு மாபெரும் சக்தியாக மீண்டும் உருவாக விரும்பும் செய்தியாகவே இது பார்க்கப்படுகிறது. எனினும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருவதால் அந்நாட்டு பொருளாதாரம் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.