தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளிடம் ஆய்வு நடத்திய அமைப்புடன் தொடர்பில்லை: அவுஸ்திரேலிய அரசாங்கம்

australian_coat_of_arms_Fotorதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொண்ட அரசசார்பற்ற அமைப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் முகாம்களுக்கு வெளியில் உள்ள இலங்கையின் அகதிகளின் வீடுகளுக்கு சென்ற அரச சார்பற்ற அமைப்பான “அட்ரா” அகதிகளிடம் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது.

இதன்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முத்திரை பதிக்கப்பட்ட பரிசுப்பொருட்களையும் குறித்த நிறுவனம் அகதிகள் மத்தியில் விநியோகித்துள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் உத்தியோகபூர்வ முத்திரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவில் இருந்து அகதிகளுக்கு அவசிய பொருட்கள் வந்துசேரவுள்ளதாகவும் குறித்த அமைப்பு அகதிகளிடம் தெரிவித்துள்ளது.

எனினும் பல மாதங்கள் கடந்தும் அவ்வாறான பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை.

எனவே, அகதிகள் மத்தியில் இருந்து ஆவணத்திரட்டலை மாத்திரமே கருத்திற்கொண்டு குறித்த அரசசார்ப்பற்ற அமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.