அனுமதி பெறாமல் அட்டன் கிளவட்டன் பாடசாலைக்கு விசேட விடுமுறை- மத்திய மாகாணசபை உறுப்பினர் அதிருப்தி !

க.கிஷாந்தன்

அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட டிக்கோயா கிளவட்டன் தமிழ் பாடசாலைக்கு அட்டன் கல்வி வலயப்பணிப்பாளரால் 21.03.2016 அன்று வழங்கபட்டுள்ள விசேட விடுமுறையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

sri_Fotor
டிக்கோயா கிளவட்டன் தமிழ் பாடசாலையில் 20.03.2016 அன்று இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த விசேட விடுமுறை இந்தப்பாடசாலைக்கு 21.03.2016 அன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த விடுமுறை தொடர்பாக மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தம்மிடம் இவ்வாரு விடுமுறை ஒன்றை வழங்குவதற்கு அட்டன் வலயகக்கல்விப்பணிப்பாளரால் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்ததாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 

அதே வேளை வாரயிறுதி நாட்களில் பாடசாலைகளில் இடம் பெறும் விளையாட்டுப் போட்டிகளுக்காக பாடசாலை நாட்களில் விடுமுறை கோருவதென்றால் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டுமெனவும் அவ்வாறு விடுமுறை பெறுகின்ற நாட்களுக்குப் பதிலாக வாரயிறுதி நாளொன்றில் பாடசாலை இடம் பெறவேண்டுமெனவும் மத்திய மாகாண கல்விப்பணிப்பாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 

ஆகவே அட்டன் கல்வி வலயத்திலுள்ள டிக்கோயா கிளவட்டன் பாடசாலைக்கு வலயக் கல்விப்பணிப்பாளரால் இன்று வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதோடு  இதன் மூலம் அட்டன் கல்வி வலயப்பணிப்பாளர் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் இவ்விடயம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.