உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி மையமாக பிரேசில் நாட்டை உருவாக்கியவர் குடும்பத்தோடு விமான விபத்தில் பலி!

 

Unknown
பிரேசில் நாட்டை உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி மையமாக உருவாக்கிய ரோஜர் அக்னெல்லி(56) குடும்பத்தோடு விமான விபத்தில் பலியானார்.

பங்கு வர்த்தகம் மற்றும் நிதி முதலீட்டு நிறுவனங்களை நடத்திவந்த ரோகர் அக்னெல்லி, பிரேசில் நாட்டு கனிமவளத்துறையான ‘வேல்’ நிறுவனத்தின் பல பங்குகள் வைத்திருந்தார். இதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இவர் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் இரும்புத்தாது உற்பத்தி பத்து மடங்குக்கும் அதிகமாகி, உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி மையம் என்ற பெருமை பிரேசிலுக்கு கிடைத்தது. நாட்டின் வருமானமும் அதிகரித்தது.

அதேவேளையில், வெட்டி எடுக்கும் இரும்புத்தாது அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல், உள்நாட்டிலேயே ஆலைகள் அமைத்து, உருக்கி, வார்ப்பு இரும்பாக உருவாக்கினால் மேலும் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன.

அப்போது, கடந்த 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவானதை காரணம் காட்டி சுமார் 2 ஆயிரம் சுரங்கத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவை எதிர்த்து அரசுடன் போராடிவந்த அக்னெல்லி, தற்போதைய அதிபர் டில்மா ரூசெப்பால் கடந்த 2011-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

எனினும், வர்த்தக மேலாண்மையில் பிரேசில் நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக வலம்வந்த அக்னெல்லி, தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தனக்கு சொந்தமான விமானத்தில் குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றார்.

வடக்கு சாவ் பாலோ நகரில் இருந்து புறப்பட்ட அவரது விமானம் உயரக் கிளம்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து இரு வீடுகளுக்கு இடையில் மோதி, வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் ரோஜர் அக்னெல்லி, அவரது மனைவி, மகன், மகள், மருமகள், மருமகன் மற்றும் ஒரு விமானி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.