உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் பயணம் செய்த சுமார் 900 குடியேறிகள் நான்கு நடவடிக்கைகள் மூலம் இத்தாலி நாட்டின் சிசிலி கடற்பகுதியில் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், லிபியா கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த ஒரு படகு மற்றும் மூழ்கிய மற்றொரு படகில் இருந்து கடந்த மூன்று நாட்களில் 600 பேரை காப்பாற்றியுள்ளதாக லிபியா நாட்டு கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.