பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தாஜூடீனின் மரணம் சம்பவித்த போது, அது சம்பந்தமாக விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் சடலத்தை சீக்கிரமாக விடுவிக்குமாறு நாமல் ராஜபக்ஸ அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக, சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தாஜூடீன் கொலை தொடர்பான விசாரணைகளை நடத்திய பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய அறிக்கைகளில் இது பற்றி கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஸ குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த அன்றைய கொழும்பு நகர எல்லைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைகளில் தலையிட்டதாக தெரியவந்துள்ளது.