கிழக்கு மாகாண சபையின் முதலைமைச்சர் வேட்பாளராக ஹசனலி ?

hasan ali hakeem slmc rauff

 

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம் டி ஹஸனலியை இறக்குவதற்கான தீவிர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முயற்சியை முஸ்லிம் காங்கிரஸின் மேல் மட்ட முக்கியஸ்தர் ஒருவர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிழக்கு மாகாணத்தில் மு கா அதிருப்தியாளர்களை ஒன்றினைத்து; ஹஸனலிக்கு பலம் சேர்ப்பதே இவரின் திட்டமாக உள்ளது. அத்துடன் ஹஸனலியை பொது முதலமைச்சர் வேட்பாளராய் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக அவர் பல்முனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார். 

இது தொடர்பில் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸைச் சார்ந்த சில முக்கியஸ்தர்களுடனும் பேச்சு நடாத்தியிருக்கின்றார். இன்னும் ஒருசில தினங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த அம்பாறை முக்கியஸ்தர்கள் பலரை அவர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. 

நிந்தவூரைப் பிரப்பிடமாகக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர் ஹஸனலி தேசியப் பட்டியல் மூலமே எம் பியாக்கப் பட்டு வருகின்றார். 

இம்முறை அந்த வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை. மக்கள் செல்வாக்கில்லை என்ற காரணத்தைக் காட்டியே அவரை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு ஹக்கீம் இதுவரை காலமும் இடம் வழங்கவில்லை. 

எனினும் அம்பாறை முஸ்லிம் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் ஹஸனலியை போட்டிக்கு நிறுத்தி அவரை முதலமைச்சராக்கி மு காவுக்கு மூக்குடைப்பதே அதிருப்தியாளர்களின் திட்டமாகும். 

தமிழ், சிங்கள மக்களுடனும் அவர்கள் சார்ந்த கட்சிகளுடனும் மிகவும் நல்லுறவைக் கொண்டிருக்கும் ஹஸனலி போட்டிக்கு நிறுத்தப்பட்டால் கிழக்கு மாகாணத்தில் மாகாண நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்த முடியுமென்று முகா அதிருப்தியாளர்கள் பெரிதும் நம்புகின்றன்றனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் நாயகம் மைத்திரி பாலசிரிசேன அக்கட்சியிலிருந்து அதிரடியாக விலகி நாட்டில் எவ்வாறு நல்லாட்சி அரசுக்கு தலைமை தாங்கினாரோ அதையொத்த பாணியில் மு காவின் செயலாளர் நாயகம் ஹஸனலியை மாகாண நல்லட்சிக்கு தலைமை தாங்க வைப்பதே இந்த நகர்வின் நோக்கமாகும்.

இன்று இடம்பெற்ற பாலமுனை மாநாட்டில் ஹஸனலி கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.