தென்னாபிரிக்காவை விளாசிய இங்கிலாந்து !

 ICC World Twenty20 India 2016:  South Africa v England

 

 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று  நடைபெற்ற சூப்பர் 10 லீக் ஆட்டத்தில் குரூப்-1ல் இடம்பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய அம்லா, குயின்டன் டிகாக் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட அம்லா 31 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட டிகாக் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரையும் மொயீன் அலி அவுட் ஆக்கினார். டிவில்லியர்ஸ் 8 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டுமினி ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 54 ரன்களும், மில்லர் 12 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

தொடக்க வீரர்களாக ஜே.ஜே.ராய், ஹால்ஸ் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தது. 2.3 ஓவர்களில் 48 ரன்களை எடுத்திருந்த போது ஹால்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 2.5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது.  

5.4 ஓவர்களில் 87 ரன்களை எடுப்பதற்குள் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டாக ரூட் களமிறங்கினார். 7.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. 

இமாலய இலக்கு என்பதால் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து அதிரடியான ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். ரூட் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினார். இம்ரான் தஹீர் மட்டும் கட்டுக் கோப்பாக ரன்களை வழங்கினார். 

அதிரடியாக விளையடிய ரூட் 44 பந்துகளில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரூட் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. 10 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டிருந்தது. 

இருப்பினும் ஆட்டம் இறுதி வரை பரபரப்பாக சென்றது. 19 ஓவர்களில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டும் தேவைப்பட்டது. 

ஆனால் முதல் பந்திலே ஜோர்தன் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலே வில்லே ரன் அவுட் ஆகி வெளியேறினார். 4 பந்துகளில் 1 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு விக்கெட்டுக்கள் கையில் இருந்தது. 3-வது பந்திலும் ரன் எடுக்கப்படவில்லை. இறுதியில் 4 வது பந்தில் அலி ஒரு ரன் எடுக்க இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது.

இமாலய இலக்கை எட்டி இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.