ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 19வது தேசிய மாநடு நாளை காலை 10 மணிக்கு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு அதிதியாக இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்.
விசேட அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவரும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என நாடு முழுவதிலும் இருந்து பங்கு கொள்கின்றனர்.
தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் தலைவர் ரவுப் ஹக்கீமின் வழிகாட்டுதலில் நிறைவடைந்துள்ளதாக மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளராகச் செயற்படும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.எ.அன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை மதியம்(18) தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொள்ளுகின்ற கட்சியின் ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்களுக்கான சகல ஒழுங்கு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்குப் பொறுப்பாக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அன்ஸில் மேலும் தெரிவித்தார்.
தேசிய மாநாடு அம்பாரை மாவட்டத்தின் பாலமுனைப்பிரதேசத்தில் நடைபெறுவதால் அம்பாரை மாவட்டம் முழுவதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கொடியினால் அலங்கரிக்கப்பட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் ஹக்கீம், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் ஆகியோரின் படங்களுடன் கட்டவுட்கள் நிறைந்து காணப்படுகின்றது.
எஸ்.எம்.அறூஸ்