முஸ்லிம் காங்கிரஸ் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக போராடியதே அதிகம் : ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்

 

rauff hakeem harees slmc

முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை சனிக்கிழமை 19ம் திகதி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கு கல்வியலாளர்கள், வர்த்தக சமூகத்தினர், மீனவ சமூகத்தினர், விவசாய சமூகத்தினர், இளைஞர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள், நலன்விரும்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கட்சி சார்பாக மு.கா பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரசின் அரசியல் போராட்டத்தில் எதிரிகளுடன் களம் நின்று போராடியதனை விட, துரோகிகளின் குழி பறிப்புக்களுக்கும், சதிமானங்களுக்கும், சதித் திட்டங்களுக்கும், காட்டிக் கொடுப்புக்களுக்கும் இடையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக போராடியதே அதிகம். இந்த தற்காப்பு நடவடிக்கையினால் சில நேரங்களில் தனது கொள்கையை முன்னெடுப்பதில் கட்சி பல தடைகளை எதிர்கொண்டிருக்கின்றது.

எமது அரசியல் தந்தை பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்தார். தமிழர்கள் எவ்வாறு மூன்று தசாப்தங்கள் சாத்வீக போராட்டங்களினை முன்னெடுத்தார்களோ அதுபோன்று முஸ்லிம் மக்களின் தனித்துவ அரசியல் பயணமும் முப்பது வருடங்களை அடைந்து விட்டது. தமிழர்களின் அரசியலுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் எழுச்சி அரசியல் முப்பது வருடங்கள் பின்நோக்கி இருக்கின்றது.

மூன்று தசாப்தங்கள் கடந்த நிலையில் எமது அரசியல் போராட்டம் புதிய பாதையை நோக்கி பயணிக்கும் ஆயத்தங்களுடன் முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு பாலமுனையில் நடைபெற இருக்கின்றது. இன்றைய முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமை அல்ஹாஜ் ரவுப் ஹக்கீம் எமது எதிர்கால அரசியல் பயணத்தினை முன்னெடுப்பதற்கான புதிய மாற்றத்தினை நோக்கிய அறைகூவலாக, பாலமுனையில் நடைபெற இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு அமையவுள்ளது.

இவ்வாறான முக்கியத்துவ மிக்க காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் பறைசாற்ற வேண்டியுள்ளதால், போராளிகள் மாநாட்டினை மிகச் சிறப்பாக எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அழைத்து வர வேண்டும்.

தேசிய மாநாடு இடம்பெறும் மைதானத்தை மக்கள் அலையென திரண்டு, அந்நிகழ்விலே கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இலங்கையிலுள்ள முழு முஸ்லிம் சமுதாயமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு தான் இருக்கிறது என்கின்ற செய்தியை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம் காங்கிரசினை அங்கீகரித்து இருக்கின்ற அல்லது அங்கீகரிக்க தயங்குகின்றவர்களுக்கு பாரியதொரு செய்தியை சொல்லுகின்ற ஒரு நிகழ்வாக இந்த தேசிய மாநாட்டை நாங்கள் மாற்றியமைக்க வேண்டிய தேவை எங்களுடைய கடமையாக இருக்கின்றது.

எனவே எமக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு நாளை நடைபெறவிருக்கும் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டுதலில் நிறைவடைந்துள்ளதாக பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்

நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொள்ளுகின்ற கட்சியின் ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்களுக்கான சகல ஒழுங்கு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்குப் பொறுப்பாக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தலைவர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.