அல்லாஹ்வுக்கு 99 திருப்பெயர்கள் – எந்தப் பெயரும் வன்முறையை போதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு

5d012a31-c084-43e9-8898-30fcbfe02dff_S_secvpf
புதுடெல்லியில் சூபியிசம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அல்லாஹ்வுக்கு இருக்கும் 99 திருப்பெயர்களில் ஒன்றுகூட வன்முறையை போதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் சூபியிசம் தொடர்பான மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்சிகள் உள்ளிட்ட ஆத்திகவாதிகளும் நாத்திகவாதிகளையும் உள்ளடக்கிய நாடான இந்திய சமூகத்தின் வளமையே, நமது பன்முகத்தனமையில்தான் அடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.

இந்த பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் திறந்த மனப்பான்மை ஆகியவற்றால்தான் இங்கு சூபியிசம் மலர்ந்தது என சுட்டிக்காட்டிய பிரதமர், தீவிரவாதம் நம்மை பிளவுப்படுத்துவதுடன், அழிக்கவும் செய்வதாக கூறினார். 

அல்லாஹ்வுக்கு இருக்கும் 99 திருப்பெயர்களில் ஒன்றுகூட வன்முறையை போதிக்கவில்லை. சூபியிசத்தின் ஆன்மாவான அன்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான சிந்தனை நமது நாட்டின் எல்லையோரம் பாய்ந்தால் அமீர் குஷ்ரோ போதித்ததுபோல் இந்த பிராந்தியமே பூலோக சொர்க்கமாக அமைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள சூபி தர்காக்களை பாதுகாக்கும் அமைப்பான அனைத்திந்திய உலமா மற்றும் மஷாயிக் வாரியத்தின் ஏற்பாட்டில் நேற்று தொடங்கி, டெல்லியில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட சூபி அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிவருகின்றனர்.