யார் கலந்து கொள்கின்றனர்? என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் : மஹிந்த !

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. முதலில் கூட்டம் நடைபெறட்டும், அதில் யார் கலந்து கொள்கின்றனர்? என்ன கதைக்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
mahintha amaraweera

கட்சியை விட்டு எவரேனும் தனித்து பயணிக்க வேண்டும் என்றால் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் இல்லாத காரணிகளை தெளிவாக முன்வைத்துவிட்டு கட்சியைவிட்டு வெளியேற முடியும். தலைமைத்துவத்தை விமர்சிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ஆதரவு அணியினர் இன்று கொழும்பில் அரசாங்கத்தை எதிர்த்து பாரிய பேரணி ஒன்றை நடத்தவிருக்கும் நிலையில் அது தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு என்னவென நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

பொது எதிரணியின் இன்னும் கூட்டம் நடக்கவில்லை. நாளை கூட்டம் இடம்பெறட்டும். அதில் யார் கலந்து கொள்கின்றனர், எந்த வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து அதன் பின்னர் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் மேற்கொண்டதைப் போல விசாரணைகளின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிலடி கொடுக்கவும் முதலில் பலமான காரணிகள் இருக்க வேண்டும். 

எனினும் இந்தக் கூட்டத்தில் இன்னும் யாரும் கலந்துகொள்வதாக கூறவில்லை. அவ்வாறு கூறும் நபர்கள் கலந்து கொள்ளவும் போவதில்லை. எவ்வாறு இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம். 

அதேபோல் இந்த விடயங்கள் தொடர்பில் பெரிய அளவில் கருத்தில் கொண்டு செயற்படவேண்டிய தேவை இல்லை. இவர்களும் எமது கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

கட்சியை விட்டு எவரேனும் தனித்து பயணிக்க வேண்டும் என்றால் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கம் இல்லாத காரணிகளை தெளிவாக முன்வைத்துவிட்டு கட்சியை விட்டு வெளியேற முடியும்.

அதைவிடுத்து கட்சியில் இருந்துகொண்டு தலைமைத்துவத்தை விமர்சித்துக் கொண்டு செயற்படுவது கட்சிக்கு நல்ல விடயம் அல்ல.

எவ்வாறு இருப்பினும் இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அல்லது மஹிந்த அதரவு அணியினர் என கூறிக்கொண்டு செயற்பட்டாலும் இறுதியில் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணியில் தான் வருவார்கள். 

எவ்வாறு இருப்பினும் அனைத்து அணியினரையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக பலப்படுத்தி 2020ம் ஆண்டு மீண்டும் எமது ஆட்சியை அமைப்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றார்.