மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் கெயிலின் சிக்ஸர் மழையில் இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்துள்ளது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் ரூட் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். பட்லர் 30 ரன்களையும், ஹால்ஸ் 28 ரன்களையும், மொர்கன் 27 ரன்களையும் எடுத்து ரன் குவிப்பிற்கு வித்திட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டுவைன் பிராவோ, ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனையடுத்து, 183 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் சார்லஸ் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து கெயில் மற்றும் சாமுவேல்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
6 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது. சீராக ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த இந்த ஜோடி 57 ரன்களில் பிரிந்தது. சாமுவேல்ஸ் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதுவரை கெயில் நிதான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார்.
பின்னர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். கெயிலின் ஆட்டத்தை இங்கிலாந்து வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய சிக்ஸர் மழையால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களை நனைய வைத்தார். இதனால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு சிரமமில்லாமல் பிரகாசமானது.
அதிரடியாக விளையாடிய கிரிஸ் கெயில் 47 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 11 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவர்களிலே 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.
அபாரமாக விளையாடி சதம் அடித்த கெயில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டி20 உலகக் கோப்பை தொடரில் கெயில் தனது இரண்டாவது சதத்தை கெயில் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.