வடக்கு செல்லும் போது தன்னை சிரித்த முகத்துடன் வரவேற்கும் வடக்கு மக்கள் : ஜனாதிபதி !

நாட்டின் முன்னைய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை விநியோகித்தாலும் அன்று அந்த மக்களின் முகத்தில் சிரிப்பை காணமுடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுக்கு தான் எந்த பொருளையும் விநியோகிக்கவில்லை என்ற போதிலும் தான் வடக்கு செல்லும் போது தன்னை சிரித்த முகத்துடன் வரவேற்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

maithripala srisena

வடக்கு மக்களின் இதய துடிப்பை அறிந்து கொண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளே இதற்கு காரணம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை புரிந்து கொண்டு அதனை செயற்படுத்த பங்களிப்பை வழங்க வேண்டியது தெற்கு மக்களின் கடமையாகும்.

நாட்டிற்கு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது என்பதை அரசியல்வாதிகளால் மாத்திரம் தனியாக செய்ய முடியாது. படித்தவர்கள், புத்தஜீவிகள் என அனைவரும் நாட்டின் எதிர்காலத்திற்காக இந்த கடமையை பொறுப்பேற்க வேண்டும்.

நல்லிணக்க வேலைத்திட்டத்தை வலுப்படுத்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பலவற்ற நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதற்காக எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

நாட்டை மகிழ்ச்சியுடன் வாழும் மனிதர்கள் இருக்கும் நாடாக கட்டியெழுப்ப வேண்டுமாயின், நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய வார்த்தைகள் யதார்த்தமாக மாறவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.