நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும் அதற்கான எந்தவொரு மரியாதையும் கிடைக்கவில்லை !

susil premajayantha
அரசியலிலிருந்து வெகு விரைவில் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் தலைமயகத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்… 

2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக பத்து தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. 

2015ம் ஆண்டில் முதல் தடவையாக தேர்தலில் தோல்வியைத் தழுவ காரணம் என்ன என்பது பற்றி அரசியிலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அம்பலப்படுத்துவேன். 

நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வது வெகு விரைவில் நடைபெறும். எவராலும் எந்த நாளும் பதவிகளை வகிக்க முடியாது, தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதா என்பது குறித்து ஒவ்வொருவரும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்க நேரிடும். 

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் எனக்கும் அவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்க நேரிட்டது. 

மூன்று தலைவர்களின் கீழ் கடமையாற்றிய நான் தலைமைத்துவத்தின் தீர்மானங்களை எதிர்த்தது கிடையாது. 

அவ்வாறு செயற்பட்ட காரணத்தினால் கடந்த பொதுத் தேர்தலில் முதல் தடவையாக எதிர்க்கட்சியில் அமர நேரிட்டது. 

நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும் அதற்கான எந்தவொரு மரியாதையும் கிடைக்கவில்லை. 

நான் அரசியிலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். 

சில தரப்பினர் வெறுமனே ஊடகக் கண்காட்சிகளை நடத்தி வருவதாகவும் அவர்களுக்கு உண்மை தெரியாது எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.