இன்னும் 3 மாதங்களில் மக்களின் காணிகளை கொடுப்பேன் : யாழில் ஜனாதிபதி !

maithri_CI

 

மக்களின் காணிகளை ஆறு மாதங்களில் கொடுப்பதாக கடந்த நத்தார் தின நிகழ்வில் தான் அளித்த வாக்குறுதியின்படி இன்னும் மூன்று மாதங்களில் காணிகளை அவர்களிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். 

26 வருடங்களாக இராணுவத்தின் வசமிருந்த நடேஸ்வராக் கல்லூரி நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்தின் 700 ஏக்கர் காணியும் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்விலேயே ஜனாதிபதி மைத்திரி இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

மக்கள் தங்களுடைய நிலங்களையே வழங்கும்படி கேட்கிறார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி அரசாங்கத்தின்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் தலையாய கடமை என்றும் அவர் கூறினார். 

மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்படும் வீடுகளையும் மக்களுடைய காணிகளை வழங்கவுமே தான் இங்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி  வீடுகளை பார்க்கச் சென்றபோது அங்கு வந்த மக்கள் தமது காணிகளை தம்மிடம் கொடுக்குமாறு கோரியதாகவும் கூறினார். 

 

Unknown

அவர்கள் தமது காணிகளையே கேட்கின்றனர் என்றும் வேறு எவருடைய காணியையும் அவர்கள் கோரவில்லை என்றும் கூறிய மைத்திரி மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்திருந்தபோதும் மக்களின் காணிகளை அவர்களிடமே வழங்குங்கள் என்று தெரிவித்திருந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். 

மக்களின் காணிகளை மக்களிடம் வழங்கும்போது தெற்கில் சிலர் இனவாதம் பேசி எதிர்ப்பதாக கூறிய ஜனாதிபதி மீண்டும் அவர்களுக்கு வடக்கிலிருந்து நிலமையை அவதானித்துப் பேச அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். 

அவர்களின் எதிர்ப்பு கண்டு பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன தெற்கில்தான் இனவாதிகள் அதிகம் உள்ளனர் என்றும் வடக்கிலிருந்தல்ல, தெற்கிலிருந்தே நல்லிணக்கம் வரவேண்டும் என்பதே தனது கருத்து என்றும் குறிப்பிட்டார். 

சமத்தும் மற்றும் சம உரிமையை கொண்ட மக்களை கொண்ட நாட்டை உருவாக்குவதற்கு முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அனைவரும் ஒன்றிணைந்தாலே நாட்டை கட்டி எழுப்ப இயலும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்திருந்தார்.