சுலைமான் றாபி
அமைச்சர் ரிஷாத் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்டோர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும் இம்மாதம் 19ம் திகதி பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு சமூகமளிக்கலாம் எனவும், அவர்களுக்காக அழைப்புக்கள் விடுக்கப் பட்டுள்ளதாகவும், இது தவிர மாநாட்டினை குழப்ப வேண்டும் அல்லது அதனை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும் எனும் நிலையில் உள்ள முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக கட்சி தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறாது என மு.கா தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்றைய தினம் (12) ஒலுவிலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றிய ஊடகவியாளர் சந்திப்பின் போதே போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கூறுகையில் :
இலங்கையில் காணப்படும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இம்மாநாட்டிற்கு வரலாம். அதற்காக எந்த தடையும் இல்லை. அமைச்சர் ரிஷாத் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்டோர்களும் தாராளமாக வரலாம் எனக்குறிப்பிட்டார். மேலும் இந்த நிலையில் குறிக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியில்
தேசிய மாநாட்டில் இவ்வாரானோர்கள் சமூகமளித்தால் முஸ்லிம் கூட்டமைப்பினை ஒருவாக்கலாமே?
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கும் விடயத்தில் கட்சி முடிவெடுக்க வேண்டும். இவ்விடயம் சம்பந்தமாக இதுவரைக்கும் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை இருந்தாலும் இந்த விடயத்தினை உருவாக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. காலம் கனியும் போது அதற்கான முடிவுகளும் எட்டப்படும். இதுதவிர தேசிய மாநாட்டில் இவ்வாறானதொரு கட்டமைப்புக்களை உருவாக்க முடியாது. ஏனென்றால் அதற்கானதொரு நிரந்தர கட்டமைப்புக்கள் வேண்டும். மேலும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்கள் முஸ்லிம் காங்கிரசின் கொள்கையினை மாற்ற வேண்டும் என்று யாரும் பிரிந்து செல்லவில்லை. மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெறவே தனிக்கட்சிகளை ஆரம்பித்து கட்சியை விட்டு பிரிந்து சென்றனர். எனவே இன்னொரு முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உருவாகும் போது அதில் எத்தனை அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்பதைப் பொறுத்துத்தான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகுவது சாத்தியமாகும். எனவே இந்த விடயத்தில் தூய எண்ணத்துடன் சிந்திக்கும் சக்திகள் மாத்திரமே இதில் புரிந்துணர்வுடன் செயற்படுவர் என்றார்.