உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் முகமது ஷாஜத் 40 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அதிகபட்சமாக முகமது நபி 52 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். அவரது அதிகபட்ச டி20 ஸ்கோர் இதுவாகும். சமியுல்லா ஷென்வாரி 43 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, அந்த அணி 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்டநாயகனாக நபி தேர்வு செய்யப்பட்டார்.