நாடு பூராகவும் மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக பரிசீலனை குழுவொன்று நியமனம்!

medicine_Fotor
நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து விநியோக பிரிவு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் குறித்த குழுவில் உள்ளடங்கியுள்ளனர். 

மருந்து தட்டுப்பாடு இருக்குமாயின் அதனை நிவர்த்தி செய்தல், கேள்விப்பத்திர முரண்பாட்டை தீர்த்தல், மருந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து அந்தக் குழு விஷேட அவதானம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் எதிர்வரும் 03 மாத காலத்திற்காக மருந்துகளை சேமித்து வைப்பது சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. 

இதுதவிர மருந்துகளின் தரத்தை பரிசோதனை செய்வதற்காக இரசாயண ஆய்வுகூடம் ஒன்று நிறுவப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

ஆண்டொன்றிற்கு தரமற்ற மருந்துகள் பல அழிக்கப்படுவதாகவும், அந்த நிலமையை கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆய்வு கூடம் அமைக்கப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.