ஹக்கீமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஒலுவில் மக்கள்!!

ரவூப் ஹக்கீம் சமுக அக்கறையற்றவர் – எதிர்க்க முடிவெடுத்துள்ள ஒலுவில் மக்கள்!
rauff hakeem
இப்னு ஜமால் – ஒலுவில்
 
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக ஒலுவில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஒலுவில் மக்களுக்கு ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாததினாலும் ஒலுவில் கல்வி வளர்ச்சி ஓரம் கட்டப்பட்டதினாலும் ஒலுவில் முஸ்லிம்கள் ரவூப் ஹக்கீமின் தலைமையை பகிரங்கமாக எதிர்க்கும் நிலைக்கு துணிந்துள்ளார்கள்.
இது தொடர்பில் தெரியவருவதாவது
ஆயிரம் பொலிஸ் நிலையங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் ஒரு பொலிஸ் நிலையம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வந்துள்ளது. இதற்கு இந்த ஊர் மக்கள் எதிர்ப்பு வழங்க அது பாலமுனைக்குச் சென்று தற்போது ஒலுலில் குறித்த பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த பொலிஸ் நிலையம் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்படுவதால் சிங்கள மக்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள துறைமுகத்திற்கு இப்பொலிஸ் நிலையம் மேலும் வலுசேர்க்கும் என்பதினால் ஒலுவிலில் இப்பொலிஸ் நிலையம் அமைவதை தடுக்குமாறு முகா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒலுவில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இவ்விடயத்தில் ரவூப் ஹக்கீம் அக்கறை செலுத்தாமல் பொடுபோக்காக இருந்ததுடன் இழுத்தடிப்பும் செய்து வந்துள்ளார்.
இவரின் பொடுபோக்கான இச்செயற்பாடு காரணமாக கடந்த வாரம் குறித்த பொலிஸ் நிலையத்திற்கான காணியின் பெறுமதியை அளவிட கொழும்பிலிருந்து அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் ஒலுவில் மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்திற்கான காணி விடயத்தில் சில அரசியல் வாதிகளுக்கும் ஒரு பொறியியலாளர்களுக்கும் ஒரு தொகைப்பணம் கிடைக்கவுள்ளதால் அவர்கள் இப்பொலிஸ் நிலையத்தை ஒலுவிலில் அமைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஒலுவில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முகா தலைவர் ரவூப் ஹக்கீமின் மற்றுமொரு செயற்பாடு தொடர்பில் ஒலுவில் மக்கள் இவர் மீது வெறுப்பில் உள்ளனர். ரவூப் ஹக்கீம் ஒலுவில் கல்வி வளர்ச்சியை பின்தள்ளிவிட்டதாக இம்மக்கள் குற்றம் சுமத்தகின்றனர்.
ஒலுவில் பிரதேசத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளான ஹம்ரா வித்தியாலயம் மற்றும் மின்ஹாஜ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பௌதீக முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் அப்பாடசாலைகளின் பௌதீக வளத் தேவைகளை நிறைவேற்றாமல் ரவூப் ஹக்கீம் பாடசாலை கட்டிடங்களை அக்கரைப்பற்றுக்கும் அட்டாளைச்சேனைக்கும் வழங்கி ஒலுவில் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை கேள்விக்குட்படுத்திவிட்டார் என இம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேசம் அபிவிருத்தியிலும் கல்வி வளர்ச்சியிலும் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை அக்கரைப்பற்றில் நிலைநாட்டுவதற்காக பௌதீக ரீதியில் வளர்ச்சிகண்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக்கட்டிடத்தை வழங்கியுள்ளார்.
அதே போன்று மாகாண சபை உறுப்பினர் நசீரின் அதிகார பலத்தினால் ரவூப் ஹக்கிமுடன் பேசி மற்றுமொரு இரு மாடிக் கட்டிடத்தை அட்டாளைச் சேனைக்கு பெற்றெடுத்தள்ளார்.
ரவூப் ஹக்கீமின் சுயநல இச்செயற்பாடு காரணமாக ஏமாற்றப்பட்டுள்ளதாக ஒலுவில் பாடசாலை மாணவர்களும் கல்விச் சமுகமும் கவலை தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்றுக்கு வழங்கிய பாடசாலைக் கட்டிடம் கல்வியில் தற்போது வளர்ச்சி கண்டு வரும் ஒலுவில் பிரதேசத்திற்கே வழங்கியிருக்க வேண்டும் என  இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் ரவூப் ஹக்கீமிடம் ஒலுவில் மக்கள் கேட்ட போது ‘இவ்விடயம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மாகாண சபை உறுப்பினர்களிடமும் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர்களிடம் கேட்ட போது எமக்கு ஒன்றும் தெரியாது தலைவரிடம் கேளுங்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தலைவரின் ஆளுமையற்ற இச் செயற்பாடு காரணமாக ஒலுவில் மக்கள் மிகவும் மனவருத்தத்துடன் உள்ளனர்.
இவைகளுக்கு மேலாக ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த  கல்வியலாளர் ஒருவரின் மகள் நுன்கலை பட்டதாரி ஆவார். இவர் கடந்த சில வருடங்களாக தூரப்பிரதேசத்தில் ஆசிரியராக கற்பித்து வருகின்றார்.
ஒலுவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் நுண்கலை பாடத்திற்கு ஆளணிப் பற்றாக் குறையும் உள்ளது. இதனால் குறித்த ஆசிரியயை ஒலுவில் பிரதேசத்திற்கு மாறுதல் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியலாளர்கள் ரவூப் ஹக்கீமை சந்தித்து பல தடவைகள் குறிப்பிட்டும் இவர் அசட்டையாக இருந்து வருவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தனைக்கும் குறித்த நுண்கலை ஆசிரியையின் தந்தையான குறித்த கல்வியலாளர் முஸ்லிம் காங்கிரஸின் 25 வருட போராளியாவார். இவரின் தேவையைக் கவனத்தில் எடுக்காத இவர் தற்போதைய இளைஞர்களுக்கு என்ன பண்ணப் போகின்றார் என்ற நியாயமான கேள்வியை நாம் உங்களிடம் முன்வைக்கின்றோம்.
எமது ஸ்தாபகத் தலைவர் அஸ்ரப் அவர்களின் விருப்பத்திற்குரிய எமது ஊரான ஒலுவில் பிரதேசமானது இன்று ரவூப் ஹக்கீம் அவர்களினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இவரின் சமுக அக்கறையற்ற – ஆளுமையற்ற செயற்பாடுகள் காரணமாக ஒலுவில் பிரதேசம் எதுவித நண்மைகளையும் அடையவில்லை. 
தேர்தலில் வாக்குச் சேகரிக்கும் ஊராக உள்ள ஒலுவிலைப் போன்ற அம்பாறை மாவட்டத்தின் ஏனைய ஊர்களும் உள்ளன. கடலரிப்பு போன்று ஒலுவில்  பிரதேசமும் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய ஊர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டே செல்கின்றது. கண்ணுக்கு தெரியாமல் அரிப்புக்கு உள்ளாகிவருகின்ற.ன இவைகளை கருத்திற் கொண்டே நாம் இன்று ரவூப் ஹக்கீமை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.