ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி ஏவுகணை சோதனை செய்யவில்லை: ஈரான்

0d46f316-6015-419d-a21f-4e4b26cc935c_S_secvpf

தான் நடத்திய ஏவுகணை சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி நடத்தவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை தயாரிக்கத் தேவையான யுரேனியம் ஈரானில் அதிக அளவில் கிடைக்கிறது. ஈரானும் அணு ஆயுதங்களை தயாரித்து குவித்து வந்தது. அதைத்தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடுகளுடன் கடந்த ஆண்டு ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதைத்தொடர்ந்து பொருளாதார தடைகள் விலக்கி கொள்ளப்பட்டன. அணு ஆயுத உற்பத்தியை குறைத்துக் கொள்வது, அணுசக்தியை, ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது போன்ற சில கட்டுப்பாடுகள் மட்டும் ஈரானுக்கு விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் பேலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. ராணுவ பயிற்சியின் ஒரு அங்கம்தான் என ஏவுகணை சோதனை ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று மீண்டும் இரண்டு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது. ஈரானின் இந்த நடவடிக்கை அண்டை நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஏவுகணை சோதனைகள் ஐ.நா. தீர்மானத்தின் விதிகளை மீறி ஏவப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி இதனை கூறியுள்ளார்.

‘‘சமீபத்தில் நடத்திய ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணை சோதனையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அதிரடி கூட்டுப்படைகளின் விரிவான திட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை மீறிவையல்ல” என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹொசைன் அன்சாரி கூறினார்.