வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க. சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, மகளிர் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது.
கூட்டணி விவகாரத்தில் தே.மு.தி.க.வின் முடிவு இழுபறியாக இருந்து வந்த நிலையில், தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பை இந்த மாநாட்டில் இன்று திடீரென விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் முதலில் பேசிய மகளிர் அணித் தலைவர் பிரேமலதா, திமுக, அதிமுக கட்சிகள் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பினார்.
இதனையடுத்து பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனியாக சந்திக்கும் என்று அதிரடியாக அறிவித்தார்.
கட்சி நிர்வாகிகளுடனும், கட்சி தொண்டர்களுடனும் கலந்து ஆலோசித்து இந்த முடிவினை எடுத்ததாகவும், தன்னுடைய முடிவில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து மேடையில் திரும்பவும் பேசிய பிரேமலதா, தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடும் என்பதற்கு விளக்கம் அளித்தார்.
தே.மு.தி.க. தலைமையில் அமையும் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், விருப்பமுள்ள கட்சிகள் அணுகி பேசலாம் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.